இன்றைய மிலாடி நபி ஏன் நாளை கொண்டாடப்படுகிறது? காரணம் இதோ..
இஸ்லாமியர்களின் மற்ற பண்டிகை மற்றும் வழிபாட்டு நாட்களை போலவே இதுவும் பிறை தெரிவதன் அடிப்படையில் கொண்டாடுப்படுகிறது.
சென்னை : ரம்ஜான், பக்ரீத் தினங்களுக்கு அடுத்த படியாக இஸ்லாமியர்களின் புனித நாளாக கொண்டாடுவது மிலாடி நபி தான். “மிலாடி நபி” (Milad al-Nabi) என்பது முஸ்லிம்களின் முன்னணி பண்டிகை ஆகும், இது ஒவ்வொரு ஆண்டும் முஹம்மது நபியின் பிறந்த நாளாக கொண்டாடப்படுகிறது.
இது “மிலாத்” என்றும் அழைக்கப்படுகிறது, இது இஸ்லாமிய காலண்டரில் ரபி உல்-ஆவல் (Rabi’ al-Awwal) மாதத்தின் 12-வது நாளில் வருகிறது. இஸ்லாமியர்களின் மற்ற பண்டிகை மற்றும் வழிபாட்டு நாட்களை போலவே இதுவும் பிறை தெரிவதன் அடிப்படையிலேயே கொண்டாடுகிறார்கள்.
இந்த நாளில், முஸ்லிம்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள் மற்றும் சமூகத்துடன் இணைந்து, அமைதியான மற்றும் அன்பையும் பகிர்ந்து கொள்கின்றனர்.
அது மட்டும் இல்லாமல், நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை நினைவு கூர்ந்து, அவர் கடைபிடித்த நல்லொழுக்கங்களை மற்றவர்களும் கடைபிடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் ஆண்டுதோறும் இந்நன்னாள் கொண்டாடப்படுகிறது.
இந்த ஆண்டு ‘மிலாடி நபி’ நாள் எப்போது வருகிறது? என்பது குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
மிலாடி நபி திருநாள் எப்போது
இந்த ஆண்டு மிலாடி நபி திருநாள், தமிழகத்தில் செப்டம்பர் 16ஆம் தேதி மிலாடி நபி பண்டிகை கொண்டாடப்படுவதாக இருந்தது. ஆனால் இன்று பிறை தெரியாததால் மிலாடி நபி பண்டிகையில் மாற்றம் செய்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் தலைமை காஜி, ஹிஜ்ரி 1446 சஃபர் மாதம் 29ம் தேதி புதன்கிழமை ஆங்கில மாதம் 04-09-2024 தேதி அன்று மாலை ரபிஉல் அவ்வல் மாத பிறை சென்னையிலும் இதர மாவட்டங்களிலும் காணப்படவில்லை.
ஆகையால் வெள்ளிக்கிழமை ஆங்கில மாதம் 06-09-2024 தேதி அன்று ரபிஉல் அவ்வல் மாத முதல் பிறை என்று ஷரியத் முறைப்படி நிச்சயிக்கப்பட்டிருக்கிறது. ஆகையால் மீலாதுன் நபி 17-09-2024 தேதி செவ்வாய்கிழமை கொண்டாடப்படுகிறது என தெரிவித்தார்.
விடுமுறை
இதனால், நாளை (செப்டம்பர் 17ஆம் தேதி) மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது. அதன்படி, அரசு, தனியார் அலுவலகங்கள், பள்ளிகள், ரேஷன் கடைகள் மூடப்படும்.