திருமாவளவன் முதன்முறையாக ஏற்றிய வி.சி.க கட்சிக்கொடி ‘திடீர்’ அகற்றம்.!
விசிக கட்சி தொடங்கப்பட்ட போது மதுரையில் முதன் முதலாக அக்கட்சித் தலைவர் திருமாவளவன் ஏற்றிய கொடி கம்பம் அகற்றப்பட்டுள்ளது.
மதுரை : விடுதலை சிறுத்தைகள் கட்சி தொடங்கப்பட்ட போது, அக்கட்சி தலைவர் திருமாவளவன் மதுரை, K.புதூர் பகுதியில் முதல் முதலாக அக்கட்சி கொடியை ஏற்றினார். அப்போது 20 அடி உயர கம்பத்தில் இந்த கட்சிக் கொடி பறக்கவிடப்பட்டது.
இக்கட்சி கொடி கம்பமானது, அண்மையில் புதுப்பிக்கப்பட்டு அதன் உயரம் 20 அடியில் இருந்து 62 அடியாக உயர்த்தப்பட்டு மீண்டும் நிறுவப்பட்டது. 62 அடியாக உயர்த்திய கொடி மாநகராட்சியில் கம்பத்திற்கு உரிய அனுமதி வாங்கவில்லை எனக்கூறி, நேற்று நள்ளிரவு 1 மணியளவில் வி.சி.க கொடி கம்பத்தை காவல்துறையினர் அகற்றியுள்ளனர்.
தகவல் அறிந்து அங்கு கூடிய விசிக கட்சியினர் , காவல்துறையினர் கட்சிக் கொடியை அகற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தும் கொடி அகற்றப்பட்டு விட்டது. இதனை அடுத்து, இன்று மதுரை மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து, விசிக கட்சி ஆரம்பித்த போது திருமாவளவனால் முதன் முதலாக ஏற்றிவைக்கப்பட்ட கொடி என்பதால் அதனை அதே இடத்தில் நிறுவ வேண்டும் எனக்கூறி மனு அளித்துள்ளனர்.
ஏற்கனவே, மதுவிலக்கு போராட்டத்திற்கு அதிமுகவுக்கு அழைப்பு, “ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு” என்று திருமாவளவன் பேசிய வீடியோ வெளியிடப்பட்டு பின்னர் டெலிட் செய்யப்பட்ட விவகாரம் என அரசியல் வட்டாரத்தில் ஒரு சலசலப்பு நிலவி வரும் சூழலில் இந்த கொடி கம்பம் அகற்றப்பட்ட விவகாரம் மேலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.