அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா.? மு.க.ஸ்டாலின் ‘சூசக’ பதில்.!
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா என்ற கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் , மாற்றம் ஒன்றே மாறாதது என்று பதில் அளித்துள்ளர்.
சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பினார். முதலீடுகளை ஈர்ப்பதற்காக சான் பிராசிஸ்கோ , சிகாகோ சென்றிருந்த முதல்வர், அதுகுறித்த பல்வேறு தகவல்களை இன்று காலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு முதலமைச்சர் பதில் அளித்தார். அப்போது செய்தியாளர் ஒருவர், “அமைச்சரவையில் மாற்றம் இருக்குமா.? அமெரிக்கா செல்வதற்கு முன்னர் மாற்றம் ஒன்றே மாறாதது என்று கூறியிருந்தீர்கள். ” என்று கேள்வி கேட்டார்.
அதற்கு பதில் அளித்த முதலமைச்சர், “தற்போது திமுக தொடங்கி 75 ஆண்டுகள் ஆனதை பவளவிழாவாக கொண்டாட காத்திருக்கிறோம். திமுகவினர் எப்போதும் சொன்னதை செய்வோம். செய்வதை சொல்வோம். நீங்கள் எதிர்பார்க்கும் சூழல் (மாற்றம்) நிச்சயம் வரும் என நம்புகிறேன். ” என பதிலளித்தார். உடன் அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் இருந்தனர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா செல்வதற்கு முன்னரே, அமைச்சரவையில் மாற்றம் இருக்கும், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பேற்பார் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால், அது குறித்த கேள்விக்கு “மாற்றம் ஒன்றே மாறாதது” என பதிலளித்துவிட்டு அமெரிக்கா புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
முதலமைச்சரே தற்போது, அதற்கான சூழல் அமையும் என கூறியிருப்பது, அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால், யார் துறை மாறப்போகிறது.? யார் துறை பறிக்கப்படுகிறது என தமிழக அமைச்சர்கள் குழப்பத்தில் இருப்பதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.