ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு.! திருமாவளவன் பரபரப்பு பேச்சு.!
ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என்று முதலில் கூறிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி தான் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் கூறினார்.
சென்னை : விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் நேற்று நடைபெற்ற அவரது கட்சி கூட்டத்தில் தொண்டர்கள் மத்தியில் பேசுகையில், ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்று கூறிய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி என தெரிவித்தார்.
மேலும் அவர் பேசுகையில், “எதிர்த்து பேசக்கூடாது , போராடக்கூடாது, கல்வியில் உயர்ந்துவிட கூடாது, உயர்ந்த பதவிக்கு வர ஆசைப்படக்கூடாது, ஆட்சி அதிகாரத்தில் பங்கு கேட்கக் கூடாது என்று இருந்த நிலையில், தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சி பற்றிய குரலை உயர்த்தினார்களோ இல்லையோ தெரியாது.
ஆனால், கடந்த 2016இல் கூட்டணி ஆட்சி என்ற குரலை உயர்த்திய கட்சி விடுதலை சிறுத்தைகள் கட்சி. (2016 சட்டமன்ற தேர்தலில் மக்கள் நல கூட்டணி தேமுதிக , விசிக , மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ஒன்றிணைந்து தேர்தலை சந்தித்தன). நான் கூறுவது, தொகுதி பங்கீடு அல்ல. ஆட்சி அதிகார பங்கீடு. அமைச்சரவையில் பங்கு வேணும் என்பதே அதிகார பங்கீடு. தொகுதியில் மட்டும் ‘எனக்கு இத்தனை சீட் கொடுங்க’ என கேட்பது கூட்டணி பங்கீடு.
ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என கூறியதுதான், என்னை மூப்பனாருக்கு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி நிறுவனர்) மிகவும் பிடிக்க வைத்தது. 1999இல் விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆரம்பித்து , பின்னர் தேர்தலில் நிற்க முடிவு செய்து நெய்வேலியில் அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திவிட்டு நான் கூறிய முதல் கோஷம் ஆட்சியிலும் பங்கு , அதிகாரத்திலும் பங்கு, கடைசி மக்களுக்கும் ஜனநாயகம் கிடைக்க வேண்டும். இங்க (விசிக கட்சிக்கு) வந்தீர்கள் என்றால் இதெல்லாம் தெரிஞ்சிக்கணும். ” என்று திருமாவளவன் உரையாற்றியுள்ளார்.
விசிக தலைவர் திருமாவளவன் பேசியது வீடியோவாக அவரது எக்ஸ் சமுக வலைதள பக்கத்தில், “ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு.. கடைசி மனிதனுக்கும் சனநாயகம் ! எளிய மக்களுக்கும் அதிகாரம்.” என்ற வாசகத்தோடு பதிவிடப்பட்டு இருந்தது. ஆனால், சில நிமிடங்களில் அந்த பதிவு மொத்தமாக நீக்கப்பட்டுவிட்டது.
ஏற்கனவே தாங்கள் நடத்தும் மதுஒழிப்பு மாநாட்டிற்கு அதிமுக கட்சியினர் வரலாம் என்று திருமாவளவன் கூறிய விவகாரம் தமிழக அரசியலில் பேசுபொருளாக மாறியிருந்தது. திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, தற்போது “ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு” என பேசியிருப்பது மீண்டும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக மாறியுள்ளது.