டாப் நிறுவனங்கள்., ரூ.7,618 கோடி முதலீடு., 11,516 வேலைவாய்ப்புகள்.! மு.க.ஸ்டாலின் தகவல்.!

அமெரிக்க பயணத்தில், அங்குள்ள டாப் நிறுவனங்களுடன் சந்திப்பு நிகழ்த்தி ரூ.7,618 கோடி முதலீட்டுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது என முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Tamilnadu CM MK Stalin Press meet at Chennai Airport

சென்னை : தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார். சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் தனது பயணத்தை முடித்துகொண்டு இன்று காலை முதலமைச்சர் சென்னை திரும்பினார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் 27ஆம் தேதி அமெரிக்கா புறப்பட்டார். அதன் பிறகு ஆகஸ்ட் 29ஆம் தேதி சான் பிரான்சிஸ்கோவில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார். பின்னர் சான் பிரான்சிஸ்கோ, சிகாகோ ஆகிய நகரங்களில் பன்னாட்டு தொழில் நிறுவன அதிகாரிகளை நேரில் சந்தித்து தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள அழைப்பு விடுத்தார்.

இந்த பயணங்களை அடுத்து, இன்று சென்னை வந்திறங்கிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் பல்வேறு தகவல்களை குறிப்பிட்டார். அதில், ” இது வெற்றிகரமான பயணம். தனிப்பட்ட முறையில் அல்ல, தமிழ்நாட்டு மக்களுக்கு சாதனைப் பயணமாக இந்தப் பயணம் அமைந்துள்ளது. உலக நாட்டு நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்பட்டது. அமெரிக்காவில் டாப் நிறுவனங்களுடன் சந்திப்பு நிகழ்த்தப்பட்டது .

கடந்த 28.8.2024 அன்று முதல் 12.09.2024 வரையில் அமெரிக்காவில் தங்கியிருந்த இந்த 14 நாட்களும் பயனுள்ள நாட்களாக அமைந்தது. இந்தப் பயணத்தின் போது 18 நிறுவனங்களுடன் 19 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. சான் பிராசிஸ்கோவில்  8 ஒப்பந்தங்களும், சிகாகோவில் 11 நிறுவனங்களுடன் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின. இதன் மூலம், 7,618 கோடி ரூபாய் முதலீட்டிற்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. மொத்தம் 11,516 புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

இந்த ஒப்பந்தங்கள் மூலம், திருச்சி, மதுரை, கோவை, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு என பல்வேறு மாவட்டங்களில் முதலீடுகள் மேற்கொள்ளப்படவுள்ளன. கடந்த 29.8.2024 அன்று சான் பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டளர் மாநாட்டில் 100க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன. இன்னும் பல நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு மேற்கொள்ள ஆர்வமாக இருப்பதாக தெரிவித்துள்ளன.

இதற்கு மணிமகுடமாக, தமிழ்நாட்டில் 30 ஆண்டுகளாக கார் தயாரிப்பில் ஈடுபட்டு வந்திருந்த ஃபோர்டு நிறுவனம், தற்போது,  சென்னை மறைமலை நகரில் மீண்டும் தங்கள் கார் உற்பத்தியை தொடங்க உள்ளதாக எங்களிடம் உத்தரவாதம் அளித்துள்ளது.” என்று தனது அமெரிக்க பயணம் பற்றியும், அதன் மூலம் மேற்கொள்ளப்பட்ட முதலீடு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பற்றியும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு தகவல்களை தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்