நகரப்போகுது காற்றழுத்த தாழ்வு பகுதி.. 18ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.!
அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு - வடமேற்கு திசையில் நகரப்போகுது காற்றழுத்த தாழ்வு பகுதி.
சென்னை : தென்கிழக்கு வங்கதேசம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.
இது அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகர்ந்து, மேற்குவங்க கடற்கரை மற்றும் ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேறுபாடு காரணமாக, தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை மையம் தெரிவித்துள்ளது.
நாளை முதல் 18ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
இன்று முதல் 16ம் தேதி வரை மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 50 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.