திடீர் மின்தடை – ‘இருளில் மூழ்கிய சென்னை’…விளக்கம் கொடுத்த மின்சார வாரியம்!
சென்னையில் ஏற்பட்ட மின் தடை, போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு செய்யப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் விளக்கம் கொடுத்துள்ளது.
சென்னை : மணலி துணை மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக, சென்னையில் முழுவதுமாக பல இடங்களில் நேற்று இரவு மின்தடை ஏற்பட்டு இருளில் மூழ்கியது . திடீரென நேற்று நள்ளிரவு மின்தடை சென்னை முழுவதும் ஏற்பட்டதன் காரணமாக, மக்கள் மின்நிலையத்தை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், அலமாதி மின் நிலையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் இரட்டை மின் ஆதாரங்கள் செயலிழந்ததால் மின் விநியோகம் துண்டிக்கப்பட்டது எனவும், போர்க்கால அடிப்படையில் செயல்பட்டு மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது எனவும் மின்வாரியம் விளக்கம் அளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
மின்தடை காரணம்
மின்தடை ஏற்பட்ட காரணம் குறித்து மின்வாரியம் கூறியதாவது ” செப்டம்பர் 12, 2024 அன்று, இரவு மேற்கண்ட 400/230 கி.வோ. மணலி துணை மின் நிலையத்தின் மின்சாரம் வழங்கும் இரண்டு மின்னூட்டி ஆதாரங்களும் இயக்கத்தில் இருந்த போதும், எதிர்பாராத விதமாக 400/230 கி.வோ. அலமாதி துணை மின்நிலையத்தில் ஒரு மிகப்பெரிய தீ விபத்து ஏற்பட்டது.
இதன் காரணமாக, மணலி துணை மின்நிலையத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு 400 கிலோ வோல்ட் மின்ஆதாரங்களின் (அலமாதி மற்றும் NCTPS II) அடுத்தடுத்த மின்தடைக்கு காரணமாக அமைந்துள்ளது. அதைப்போல, நிலையத்தில், ஒரு ஜம்பர் துண்டிப்பும் கண்டறியப்பட்டது. தீ உடனடியாக
அணைக்கப்பட்டது.
மின்தடை ஏற்பட்ட இடங்கள்
மயிலாப்பூர், லூஸ், சாந்தோம். நுங்கம்பாக்கம், ராயபுரம், தண்டையார்பேட்டை, டோல்கேட், சைதாப்பேட்டை வியாசர்பாடி, செம்பியம், கோளத்தூர், பெரியார் நகர், மாதவரம், புழல், ரெட் ஹில்ஸ், கொடுங்கையூர், அண்ணா சாலை, பாரிஸ், மேற்கு ஜார்ஜ் டவுன், எழும்பூர், மற்றும் சிந்தாதிரிப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு மின்தடை ஏற்பட்டது.
மின்சார வாரியம் விளக்கம்
மின்தடை ஏற்பட்டதை தொடர்ந்து இரவு 11 மணி அளவில் தொடங்கப்பட்டு, நள்ளிரவு 12 மணி அளவில் அண்ணாசாலை, சிந்தாதிரிப்பேட்டை. நுங்கம்பாக்கம். செம்பியம். பெரியார் நகர் பகுதிகளுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களுக்கும், 13 -ஆம் தேதி அதி காலை 1 மணி அளவில் புளியந்தோப்பு, கொளத்தூர் பகுதிகளுக்கு உட்பட்ட துணை மின் நிலையங்களுக்கும். 02 மணி அளவில் மணலி, மயிலாப்பூர். வியாசர்பாடி, அடையாறு மற்றும் எண்ணூர் பகுதிகளுக்கு என சென்னை மாநகரம் முழுவதும் 100% மின்சாரம் சீரமைக்கப்பட்டது.
மேற்கண்ட மின்தடை காரணமாக, சென்னை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து மருத்துவமனைகள் மற்றும் அனைத்து அத்தியாவசிய சேவைகளிலும் எந்த வித பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் விளக்கம் கொடுத்துள்ளது.