கிருஷ்ணகிரி முதல் சென்னை வரை.., பெண்களுக்கு பாதுகாப்பில்லை.! அதிமுக போராட்டம் அறிவிப்பு.!
பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகளை கட்டுப்படுத்த தவறியதாக கூறி திமுக அரசை கண்டித்து அதிமுக , வரும் செப்டம்பர் 24ஆம் தேதி போராட்டத்தை அறிவித்துள்ளது.
சென்னை : அதிமுக பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி இன்று ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளார். அதில், தமிழகத்தில் திமுக அரசுப் பொறுப்பேற்ற கடந்த 40 மாதங்களில் சமூக விரோத குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாகக் கூறி, அதிமுக சார்பில் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசைக் கண்டித்து அதிமுக மகளிரணி மற்றும் இளம் பெண்கள் பாசறை சார்பாக சென்னை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அதிமுக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
மேலும், அதிமுகவின் சமூக வலைதள பக்கத்தில் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ” திமுக அரசுப் பொறுப்பேற்ற கடந்த 40 மாதங்களில் சமூக விரோத குற்றச்செயல்கள் அதிகரித்து வருகிறது. திமுக ஆட்சியில் கொலைகாரர்களும், கொள்ளைக்காரர்களும் பாலியல் வன்கொடுமை செய்பவர்களும் சுதந்திரமாகவும், சர்வ சாதாரணமாகவும் குற்றம் புரிவது வாடிக்கையாக இருக்கிறது.
6 வயது சிறுமி முதல் 60 வயது பெண்கள் வரை யாருக்குமே தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவி வருகிறது. இதுகுறித்து பலமுறை சட்டமன்றத்திலும், அறிக்கை வாயிலாகவும், பேட்டிகள் மூலமும் நான் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தும், அதனை தடுக்க திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக தமிழ்நாட்டில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன.
காவல்துறைக்கு திமுக அரசு முழு சுதந்திரத்தை இன்று வரை வழங்கவில்லை. ஒருசில காவல்துறையினர் சமூக விரோதிகளுக்கு உடந்தையாக இருப்பது செய்திகள் வாயிலாக வெளியாகிறது. கடந்த புதன்கிழமை அன்று சென்னை உயர்நீதிமன்ற வழக்கு விசாரணையின் போது கூட, ” தமிழகத்தில் போதைப் பொருள் நடமாற்றம் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்த ஒரு சிறப்புக் குழுவை அமைப்போம்.” என உயர்நீதிமன்றம் தமிழக அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
கிருஷ்ணகிரி பள்ளி மாணவிகளுக்கு நேர்ந்த பாலியல் வன்கொடுமை, கோவை மேட்டுப்பாளையம் அருகே அரசு பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து ஆசிரியர் சம்பவம், சிவகங்கை மாவட்டத்தில் 3ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் வன்கொடுமை நேர்ந்தது ,
கோவை மாவட்ட வால்பாறை அருகே அரசு கலைக் கல்லூரி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தற்காலிக பேராசிரியர்கள் சம்பவம், தஞ்சாவூர் ஒரத்தநாடு அருகே 23 வயதுப் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரம், திருச்சியை சேர்ந்த 17 வயது கல்லூரி மாணவி திருச்சி சூப்பரண்டு அலுவலகத்தில் செப்டம்பர் 3ஆம் தேதி கூட்டுப்பாலியல் பாலியல் புகார் அளித்த சம்பவம், சென்னை அண்ணா நகரில் 10 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு உள்ளிட்ட பாலியல் குற்றச் சம்பவங்களை திமுக அரசு தடுக்கத் தவறிவிட்டது.
இதனை கண்டித்து, அதிமுக மகளிர் அணி மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் வரும் செப்டம்பர் 24 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று காலை 9.30 மணியளவில் சென்னை மாநகரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.” என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.