சீதாராம் யெச்சூரி மறைவு : அரசியல் தலைவர்கள் இரங்கல்.!

சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

RIP Sitaram Yechury

டெல்லி : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி (72) காலமானார். டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

நுரையீரல் தொற்று காரணமாக கடந்த ஆக.19ம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரது உடல்நிலை மோசமடைந்தது. தொடர்ந்து, வென்டிலேட்டர் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று பிற்பகல் உயிர் பிரிந்தது.

இவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்கள் மூலம் இரங்கல் செய்தியை பகிர்ந்து வருகின்றனர்.

காங்கிரஸ்

இந்திய தேசிய காங்கிரஸ் தனது எக்ஸ் தள பக்கத்தில்,  “கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் மூத்த தலைவருமான சீதாராம் யெச்சூரியின் மறைவு இந்திய அரசியலுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்பாகும்.

இறந்தவரின் ஆத்மா சாந்தியடைய இறைவன் அவரது காலடியில் சாந்தியடையட்டும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இந்த இழப்பைத் தாங்கும் ஆற்றலை வழங்கட்டும் ” என குறிப்பிடப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், சீதாராம் யெச்சூரி எனது நண்பர். இந்தியாவின் சித்தாந்தத்தை பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார் சீதாராம் யெச்சூரி, நமது நாட்டைப் பற்றிய ஆழமான புரிதல் உள்ள மிகச்சிறந்த பாதுகாவலர். நம் நாட்டின் மீது தெளிவான புரிதல் கொண்டவர், அதன் கொள்கையை காப்பாற்ற நினைப்பவர். அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மு.க ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில், “இடதுசாரி இயக்கத்தின் தீவிர வீரரும், இந்திய அரசியலில் உயர்ந்த ஆளுமையுமான தோழர் சீதாராம் யெச்சூரியின் மறைவு ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

அவருடன் நான் கொண்டிருந்த நுண்ணறிவான தொடர்புகளை நான் எப்போதும் போற்றுவேன். இக்கட்டான நேரத்தில் அவரது குடும்பத்தினருக்கும் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிச்சாமி

அதிமுக  கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் தள பக்கத்தில்,  “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் திரு. சீதாராம் யெச்சூரி அவர்கள் காலமானார் என்ற செய்திகேட்டு துயருற்றேன். இந்திய அரசியல் தலைவர்களின் நன்மதிப்பைப் பெற்ற சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவு நாட்டிற்கும், தொழிலாளர் வர்க்கத்திற்கும் பேரிழப்பாகும்.

அவரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை என் சார்பிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

டி. டி. வி. தினகரன்

அமமுக தலைவர் டி. டி. வி. தினகரன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளரும், மூத்த அரசியல்வாதியுமான திரு.சீதாராம் யெச்சூரி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

அரசியல்வாதியாக, பொருளாதார நிபுணராக, எழுத்தாளராக பன்முகத்தன்மை கொண்டவராக திகழ்ந்த திரு.சீதாராம் யெச்சூரி அவர்களை இழந்துவாடும் உறவினர்களுக்கும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம்வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது எக்ஸ் தள பக்கத்தில்,  “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திரு.சீதாராம் யெச்சூரி அவர்கள் மறைவிற்கு இரங்கல் செய்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திரு.சீதாராம் யெச்சூரி அவர்கள் நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு 72 வயதில் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன்.

2005 முதல் 2017 வரை மாநிலங்களவையில் உறுப்பினராக பதவி வகித்துள்ளார். நிமோனியா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இறந்துவிட்டார் என்ற செய்தி மிகவும் துயரமானது. அவரின் ஆத்மா சாந்தி அடையவும், அவர் குடும்பத்தாருக்கும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் அனைவகுக்கும் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 வி.கே.சசிகலா

அஇஅதிமுக பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா தனது எக்ஸ் தள பக்கத்தில்,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் திரு.சீதாராம் யெச்சூரி அவர்கள் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தற்போழுது அவர் உயிரிழந்து இருக்கிறார் என்ற செய்தியறிந்து மிகவும் வருத்தமுற்றேன்.

திரு.சீதாராம் யெச்சூரி அவர்களை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், அவர் சார்ந்த கட்சியின் தோழர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும், தலைமைக்குழு உறுப்பினருமான தோழர் திரு. சீதாராம் யெச்சூரி அவர்கள் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி காலமான செய்தி கேட்டு அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.

இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரான தோழர் திரு.சீதாராம் யெச்சூரி அவர்களது மறைவு கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மட்டுமின்றி மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளுக்கும் பேரிழப்பாகும்.அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், கம்யூனிஸ்ட் நண்பர்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன் ‘ என குறிப்பிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live news
Actor Allu Arjun - Telangana CM Revanth reddy
Union minister Nirmala Sitharaman
High Rise Residential Building in Kazan
Thaipoosam (1)
Vittalkumar murder case - Bala Sait and Dharani kumar arrested
Bengaluru - Accident