ஆந்திராவில் மினி லாரி கவிழ்ந்து விபத்து… 7 பேர் பலி!!
மினி லாரி கவிழ்ந்து 7 பேர் பலியான விபத்து தொடர்பாக காவல்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஆந்திரா : கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் புதன்கிழமை மினி லாரி கவிழ்ந்ததில் 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தேவரப்பள்ளியில் சின்னைகுடம் சிலகா பகால பகுதியில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. முந்திரி கடலை ஏற்றிச் சென்ற மினி லாரி டி நரசாபுரம் மண்டலம் பொர்ரம்பாளையம் பகுதியில் இருந்து சென்றுகொண்டபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சாலையில் இருந்த பள்ளத்தில் இறங்காமல் இருக்க மினி லாரியை திருப்பியபோது எதிர்பாராத விதமாக கால்வாயில் விழுந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஓட்டுநர் தப்பிய நிலையில், மினி லாரியில் இருந்த 9 கூலித் தொழிலாளிகளில் 7 பேர் உயிரிழந்தனர்.
மேலும், விபத்தில் 2 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உள்ளூர் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த தகவலை கிழக்கு கோதாவரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நரசிம்ம கிஷோர் உறுதிப்படுத்தினார்கள். விபத்து ஏற்பட்டதை தொடர்ந்து அப்பகுதி மக்களும், போலீசாரும் இணைந்து சாக்கு மூட்டைகளுக்கு அடியில் இருந்த உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து சம்பவம் குறித்து அந்த பகுதி காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள். மேலும், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு சாலை விபத்து குறித்து ஆழ்ந்த அதிர்ச்சியையும் வருத்தத்தையும் தெரிவித்தார். பலியானவர்களின் குடும்பங்களுக்கு அரசு துணை நிற்கும் என்றும் தேவையான உதவிகளை அரசு செய்யும் என்றும் அவர் உறுதியளித்தார்.