எனக்கு ஏன் காங்கிரஸ் சீட் கொடுக்கவில்லை.? பஜ்ரங் புனியா விளக்கம்.!
எங்கள் இருவரில் ஒருவர் தான் தேர்தலில் போட்டியிட வேண்டும் என முடிவு செய்தோம். அதனால் தான் வினேஷ் போகத் தேர்தலில் போட்டியிடுகிறார் என பஜ்ரங் புனியா விளக்கம் அளித்துள்ளார்.
டெல்லி : வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் வேட்பாளராக களமிறங்க உள்ளார் என நேற்று அறிவிக்கப்பட்டது. வினேஷ் போகத் மற்றும் பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் தங்கள் விளையாட்டில் இருந்து விலகி முழுநேர அரசியலில் களமிறங்கியுள்ளனர்.
வினேஷ் போகத், பஜ்ரங் புனியா ஆகிய இருவரும் நேற்று காங்கிரஸில் இணைந்தது குறித்தும், ஹரியானா தேர்தலில் காங்கிரஸ் சார்பில் வினேஷ் போகத் களமிறங்கியது குறித்தும் பாஜகவினர் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். பாஜக முன்னாள் எம்பி பிரிஜ் பூஷன் சிங் மீதான பாலியல் புகார் தொடர்பாக மல்யுத்த வீரர்கள் போராடியதற்கு பின்னால் காங்கிரஸ் இருந்தது என்றும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
இந்த விவகாரங்கள் குறித்த கேள்விகளுக்கு பஜ்ரங் புனியா ANI செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறுகையில், ” எங்களில் ஒருவர் மட்டுமே தேர்தலில் போட்டியிடுவது என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். அதன்படி வினேஷ் தேர்தலில் போட்டியிடுகிறார். நான் வினேஷுக்கு துணையாக நிற்கிறேன். நான் கட்சி பணிகளில் ஈடுபடுவேன். அவர்கள் கொடுத்த பொறுப்பை நிறைவேற்றுவேன். ” என்று கூறினார்.
மல்யுத்த வீரர்களின் போராட்டத்திற்கு பின்னால் காங்கிரஸ் செயல்பட்டது என்ற குற்றச்சாட்டு குறித்து, அவர் கூறுகையில் , “நாங்கள் ஏன் போராட்டம் செய்யும் அளவுக்கு தள்ளப்பட்டோம் என்பது மக்களுக்கு தெரியும் . காங்கிரஸ் கட்சியினரோ அல்லது வேறு கட்சியினரே எங்களுக்கு பின்னால் இல்லை. அப்போது எங்களுக்கு அரசியலில் எந்த தொடர்பும் இல்லை. ஆரம்பத்தில் எந்த அரசியல்வாதியையும் நாங்கள் எங்கள் போராட்ட மேடையில் அனுமதிக்கவில்லை. பொய்யான கதையை அமைப்பது அவர்களின் (பாஜக) வேலை. அவர்கள் கூறுவதில் உண்மையில்லை.”
மேலும், “எங்களுக்கு அளித்து வரும் ஆதரவிற்கு மக்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். மல்யுத்தத்தின் மூலம் பெற்ற அதே அன்பை அரசியலிலும் பெறுவோம் என்று நினைக்கிறேன். மக்கள் சேவை உணர்வோடு இங்கு வந்துள்ளோம். சாமானிய மக்களுக்காக கடுமையாக உழைப்பேன். ” என்று பஜ்ரங் புனியா பேட்டியளித்து இருந்தார்.