“RCB கேப்டன் கே.எல்.ராகுல்”! கோஷமிட்ட ரசிகர்கள்..வைரலாகும் வீடியோ!
இந்தியா A மற்றும் இந்தியா B அணிகளுக்கு இடையேயான துலிப் ட்ராபி போட்டியில் ரசிகர்கள் "ஆர்.சி.பி கே.எல்.ராகுல்" என கோஷமிட்ட வீடியோ வைரலாகி வருகிறது.
சென்னை : நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் லக்னோ அணியின் கேப்டன் கே.எல்.ராகுல் பெயர் ட்ரெண்டிங்கில் இருந்தது என்றே சொல்லவேண்டும். ஏனென்றால், ஐபிஎல் தொடரில் ஹைதராபாத் அணிக்கு எதிராக ஒரு போட்டியில் லக்னோ அணி படு தோல்வி அடைந்திருந்ததை தொடர்ந்து அந்த போட்டி முடிந்தவுடன் லக்னோ அணியின் உரிமையாளரான சஞ்சீவ் கோயங்கா, கேப்டன் கே.எல்.ராகுலை பெவிலியன் வரை வந்து திட்டி இருந்தார்.
இந்த சம்பவம் அந்த சமயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதன் பிறகு கே.எல்.ராகுலை தனது வீட்டிற்கு வரவழைத்து அவருக்கு விருந்து கொடுத்து அந்த பிரச்னைக்கு சஞ்சீவ் கோயங்கா முற்றுப்புள்ளி வைத்திருந்தார். இருப்பினும், அடுத்த ஐபிஎல் தொடர் அதாவது 2025 ஐபிஎல் தொடரில் கே.எல்.ராகுல் லக்னோ அணியை விட்டு வெளியேறி பெங்களூரு அணிக்குச் செல்ல உள்ளதாக ஒரு தகவல் பரவியது.
ஏனென்றால், வரும் 2025 ஆம் ஆண்டின் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் இந்த ஆண்டின் இறுதியில் நடைபெறவுள்ளது. எனவே, அந்த ஏலத்தில் பெங்களூர் அணி கே.எல்.ராகுலை வாங்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில், கே.எல்.ராகுலை ரசிகர்கள் இப்போதே பெங்களூர் அணியின் கேப்டன் என அழைக்க தொடங்கிவிட்டார்கள்.
இந்திய உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் நடைபெற்று வரும் ஒரு போட்டியில் இந்தியா A அணியும், இந்தியா B அணியும் விளையாடி வருகிறது. இந்த போட்டியில் கில் தலைமையிலான இந்தியா A அணியில் கே.எல்.ராகுல் இடம் பெற்றுள்ளார். இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் பேட்டிங் செய்த கே.எல்.ராகுல் 111 பந்துக்கு 37 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை இழந்திருந்தார்.
அதே நேரம், இந்த போட்டியின் இடையில் ஒரு முறை கே.எல்.ராகுல் மைதனத்திற்கு வந்த போது அவரை பார்த்த ரசிகர்கள் “ஆர்.சி.பி அணியின் கேப்டன் கே.எல்.ராகுல்.. ஆர்.சி.பி கே.எல்.ராகுல்” என ஹிந்தியில் கோஷமிட்டனர். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இன்னும் ஏலமும் நடக்கவில்லை, பெங்களூர் அணி கே.எல்.ராகுலை அணியில் எடுக்கவும் இல்லை. ஆனால், அதற்குள் அவருக்கு இவ்வளவு வரவேற்பு பெங்களூரு அணி ரசிகர்களால் கிடைத்துள்ளது. இது அவரை உற்சாக படுத்தியிருக்கலாம் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். இந்த சம்பவம் மூலம் கே.எல்.ராகுலை எந்த அணி வாங்குவார்கள் என்பதில் அணியின் உரிமையாளர்கள் தீவிரம் காட்டுவதை விட ரசிகர்கள் தீவிரம் காட்டி வருவது ஐபிஎல் தொடருக்கு ஒரு உத்வேகமாக அமைந்துள்ளது.