விநாயகர் சதுர்த்தி: வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள்.!
விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை : நாடு முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது. முதற்கடவுளாக போற்றப்படும் விநாயகரின் சிறப்பைக் கொண்டாடும் வகையில், விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.
இதையொட்டி கோயில்களில் விநாயகர் சிலைக்கு சிறப்பு பூஜைகள், அபிஷேகங்கள் நடைபெற்றன. வீடுகளிலும் விநாயகர் சிலை வைத்து, கொழுக்கட்டை மற்றும் விநாயகருக்கு பிடித்தமான பலகாரங்கள் படைத்து மக்கள் வழிபடுகின்றனர்.
இந்நன்னாளை முன்னிட்டு அரசியல் தலைவர்கள் தங்களது சமூக வலைத்தளங்களில் மூலம் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ராகுல் காந்தி முதல் எடப்பாடி கே.பழனிசாமி வரை வாழ்த்து செய்திகள் பின்வருமாறு பார்க்கவும்.
ராகுல் காந்தி
காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், ஸ்ரீ கணேஷ் சதுர்த்தியின் அனைத்து நாட்டு மக்களுக்கும் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்தத் திருநாளில் உங்கள் வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தையும் நீக்கி மகிழ்ச்சியையும் செழுமையையும் தருமென நம்புகிறேன்” என ஹிந்தியில் குறிப்பிட்டுள்ளார்.
பிரியங்கா காந்தி
காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தனது எக்ஸ் தள பக்கத்தில், “அன்னை பார்வதி மற்றும் தந்தை சிவன் ஆகியோரின் அன்பு மகனான கணேஷனுக்கு, இன்று விநாயக சதுர்த்தி. இந்த புனித நாளில், கணபதி பாப்பா மோரியாவின் கோஷங்கள் வானத்தை முட்டும் அளவிற்கு எதிரொலிக்கும். அனைத்து இந்தியர்களுக்கும் வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
எடப்பாடி பழனிச்சாமி
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி தனது எக்ஸ் தள பக்கத்தில், ” வேழ முகத்து விநாயகரைத் தொழ வாழ்வு மிகுந்து வரும்” என்ற வாக்கிற்கு ஏற்ப, முழுமுதற் கடவுளாக விளங்கும் விநாயகப் பெருமானின் திருஅவதாரத் திருநாளான விநாயகர் சதுர்த்தியை மகிழ்ச்சியுடன் கொண்டாடும் அனைவருக்கும் எனது உளங்கனிந்த விநாயகர்_சதுர்த்தி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அண்ணாமலை
பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் தள பக்கத்தில், “அனைவரது வாழ்விலும் தடைகள் நீங்கி, நலமும் வளமும் பெருகிட, வாழ்வில் மென்மேலும் உயர, விநாயகப் பெருமான் அருள் துணை நிற்கட்டும். முழுமுதற் கடவுள் எம்பெருமான் விநாயகப் பெருமான் அவதரித்த தினம் கொண்டாடும் அனைவருக்கும், விநாயகர் சதுர்த்தி வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழிசை சௌந்தரராஜன்
ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தனது எக்ஸ் தள பக்கத்தில், “எந்த ஒரு புதிய முயற்சியைத் தொடங்கும் போதும் விநாயகரை வணங்கி தொடங்கப்படுகிறது. இந்த விநாயகர் சதுர்த்தி விழா அனைவரது வாழ்விலும் ஆரோக்கியத்தையும், அமைதியையும்,செழிப்பையும் அளிக்க வேண்டும் என்று கூறி பாரத தேச மக்கள் அனைவருக்கும் எனது விநாயகர்சதுர்த்தி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.