“தவெக மாநாடு நடைபெறும் நேரம் இது தான்”… புஸ்ஸி ஆனந்த் சொன்ன தகவல்!
மாநாடு தொடர்பான காவல்துறையின் 21 கேள்விகளுக்கான விளக்கத்தை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அளித்துள்ளார்.
விக்கிரவாண்டி : அரசியலில் அடுத்த நகர்வாக தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த அக்கட்சி தலைவர் விஜய் முடிவெடுத்துள்ளார். அதற்கான, ஏற்பாடுகள் ஒரு பக்கம் நடைபெற்றுக்கொண்டுள்ள நிலையில், வரும் செப்டம்பர் 23-ஆம் தேதி மாநாடு நடத்த அனுமதிக்கோரி கட்சியின், பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகஸ்ட் 28-ஆம் தேதி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார்.
காவல்துறை வைத்த முக்கிய கேள்விகள்
மாநாடு நடத்துவதற்கு முன்பே மக்களின் பாதுகாப்புகளை கருதி காவல்துறை சார்பில் இருந்து 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸ் ஒன்று த.வெ.கட்சிக்கு அனுப்பப்பட்டிருந்தது. அதில் மிகவும் முக்கிய கேள்வியாக ‘மாநாட்டில் எத்தனை நபர்கள் கலந்து கொள்வார்கள்? அதில் ஆண்கள், பெண்கள், முதியவர்கள் மற்றும் குழந்தைகளின் விபரம் குறித்த தகவலை கொடுக்கவேண்டும்.
மற்றோரு முக்கிய கேள்வியாக “மாநாட்டிற்கு வரும் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்படுள்ளதா? அந்த இடத்தின் உரிமையாளர் யார்?” அவரிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? எனவும் மாநாட்டுக்கு அனுமதிகேட்டு வழங்கப்பட்டுள்ள மனுவில் மாநாடு எவ்வளவு நேரம் நடைபெறும் என்பதற்கான நேரம் குறிப்பிடப்படவில்லை என்பதால் நேரத்தையும் சரியாக கூறவேண்டும் எனவும் காவல்துறை சார்பில் கேள்விகேட்கப்பட்டிருந்தது. காவல்துறை கேட்டிருந்த அப்த 21 கேள்விகளுக்கு வழக்கறிஞர் குழுவுடன் ஆலோசனை நடத்தி பதில் அறிக்கை அளிக்கப்படும் எனவும் த.வெ.க சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
மாநாடு குறித்து புஸ்ஸி ஆனந்த்
இதனையடுத்து, செப் 6 மாநாடு தொடர்பான காவல்துறையின் 21 கேள்விகளுக்கான விளக்கம் அடங்கிய அறிக்கையை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் காவல் ஆணையரிடம் அளித்தார். அளித்த பிறகு, செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது மாநாடு நடைபெறும் நேரம் குறித்தும், மாநாட்டில் போடப்படவுள்ள நாற்காலிகள் பற்றியும் சில விஷயங்களை பேசினார்.
இது குறித்து பேசிய புஸ்ஸி ஆனந்த் ” காவல்துறை கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளோம். மாநாட்டிற்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா ஆகிய இடங்களில் இருந்தும் தொண்டர்கள் வருவார்கள். பெண்கள், முதியோர்களுக்கு தனித்தனியாக இருக்கை போட திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமாக மாநாட்டில் 50,000 பேருக்கு இருக்கைகள் போடப்பட உள்ளன ” எனவும் காவல்துறைக்கு பதில் அளித்து இருப்பதாக அவர் கூறினார்.
மேலும், மாநாடு நடைபெறும் நேரம் பற்றி பேசிய அவர் ” நண்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மாநாடு நடைபெறும் . தலைவர் விஜய் 6 மணியில் இருந்து பேச தொடங்குவார்” எனவும் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்தார். தவெக அளித்துள்ள பதிலை பார்த்துவிட்டு காவல்துறை அனுமதி அளித்தபிறகு மாநாடு குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.