மகா விஷ்ணு மீது வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை? மாற்றுத்திறனாளிகள் புகார்.!
தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக மகா விஷ்ணு மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை : அசோக் நகர், சைதாப்பேட்டை பகுதியில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவர்களிடையே, மகா விஷ்ணு என்பவர் நேற்றைய தினம் உரையாற்றினார். இதில், தன்னை உணர்தல் என்று அவர் ஆற்றிய சொற்பொழிவு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.
மகா விஷ்ணுவின் சர்ச்சை பேச்சு :
தனியார் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த மகா விஷ்ணு ஆன்மீக தேடல் குறித்து மாணவர்களிடம் உரையாற்றினார், மேலும், அங்கு வந்திருந்த மாணவ- மாணவிகளின் கண்களை மூடச் சொல்லிப் பாடல்களை ஒலிக்கவைத்துள்ளார்.
அங்குப் பேசிய அவர், “மாற்றுத்திறனாளிகள் கை, கால் இல்லாமல் பிறப்பதற்கு அவர்கள் முற்பிறப்பில் செய்த பாவம் தான் காரணம்”, எனக் கூறியிருக்கிறார். அதே போல சைதாப்பேட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களிடம் பேசிய அவர், “கடந்த காலங்களில் அவர்கள் செய்த பாவங்களுக்கு ஏற்ப இந்த ஜென்மம் கடவுள்களால் படைக்கப்பட்டிருக்கிறது,” எனப் பேசி இருக்கிறார்.
இதனைக் கண்டித்து மாற்றுத்திறனாளி ஆசிரியர் சங்கர் கண்டித்துள்ளார். ஆனால், அவரை மகா விஷ்ணு மைக்கில் அவமானப்படுத்தினார். இது தொடர்பான வீடியோக்களும் சமூகத் தளங்களில் வெளியாகி இருந்தது. மேலும், நெட்டிசன்களும் இவர் பேசியதைக் கண்டித்து சமூகத்தளத்தில் கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, சென்னையில் உள்ள அசோக் நகரில் இருக்கும் பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஸ் நேரில் சென்று விசாரணை நடத்தினார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் எனவும் உறுதியளித்திருந்தார்.
மகா விஷ்ணு மீது புகார் :
இந்நிலையில், இன்று மகாவிஷ்ணு மீது தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பாக சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரில், “மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் அவர்கள் மனம் புண்படும்படியும், அறிவியலுக்கு மாறாகவும் மகாவிஷ்ணு சொற்பொழிவு ஆற்றி இருக்கிறார். இவர் பேசியதை நாங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கு எதிரான வன்செயலாக நாங்கள் கருதுகிறோம்.
இதனால், இந்த மகாவிஷ்ணுவை மாற்றுத் திறனாளிகளுக்கு எதிரான வன்கொடுமை சட்டப்படியும், 2016 ஊனமுற்றோர் உரிமைகளின் சட்டம் படியும் கைது செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,” என அந்த மனுவில் அவர்கள் கூறியுள்ளனர்.