வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு…தமிழகத்தில் 6 நாட்கள் மழைக்கு வாய்ப்பு!
தமிழகத்தில் வரும் செப்டம்பர் 12-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
சென்னை : மத்தியமேற்கு மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் செப்டம்பர் 5-ஆம் தேதி நிலவிய காற்றழுத்ததாழ்வு பகுதி, இன்று (06-09-2024) மத்திய மற்றும் அதனை ஒட்டியுள்ள, வடக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவுகிறது.
இது 9-ஆம் தேதி வடக்கு திசையில் நகர்ந்து, வடமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் காற்றழுத்ததாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். அதற்கடுத்த 3-4 நாட்களில் மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, மேற்கு வங்காளம்-வடக்கு ஓடிசா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவக்கூடும்.
6 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு
இதன் காரணமாக, செப்டம்பர் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதைப்போல, 8 முதல் 12 -ஆம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை காரைக்கால் பகுதிகளிலும் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்
சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.