விஜய் போட்ட கட்டளையை மீறிய ரசிகர்கள்? மதுரையில் செய்த அட்டகாசம்!!
கோட் படம் வெளியானதைத்தொடர்ந்து மதுரையில் போக்குவரத்துக்கு இடையூறு செய்யும் வகையில் ரசிகர்கள் மோசமான சம்பவத்தில் ஈடுபட்டனர்.
சென்னை : விஜய் படங்கள் வெளியானாலே போதும் முதல் நாள் முதல்காட்சியை ரசிகர்கள் திருவிழா போல கொண்டாடுவது உண்டு. அப்படி தான் தற்போது, பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான ‘GOAT’ படத்தினை கொண்டாடி வருகிறார்கள். தமிழகத்தில் 9 மணிக்கு முதல் நாள் முதல் காட்சி தொடங்கப்பட்ட நிலையில், காலை முதலே ஒவ்வொரு திரையரங்கு வாசல்களில் காத்திருந்து படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
விஜயின் மீது அவர்கள் வைத்துள்ள அன்பின் வெளிப்பாடு இதுபோன்ற சம்பவங்களை பார்க்கும்போது தெரிகிறது. ஆனால், அதே சமயம் அளவு கடந்த அன்பின் காரணமாக மகிழ்ச்சியில் மக்களுக்கு இடையூறு செய்யும் வகையில், சில ரசிகர்கள் மோசமான சம்பவங்களிலும் ஈடுபட்டு வருகிறார்கள்.
அதற்கு உதாரணமாக, மதுரை பகுதியில் ‘GOAT’ படம் இன்று வெளியாவதையொட்டி, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சில விஜய் ரசிகர்கள் ஹாரன் அடித்தபடி இருசக்கர வாகனத்தில் நின்றுகொண்டு, பிற வாகனங்களை மறித்தபடி கடுமையாக கூச்சலிட்டுள்ளனர்.
இதுபோன்ற எந்த சம்பவங்களிலும் ஈடுபடக்கூடாது என படம் வெளியாகும் முன்னதாகவே விஜய் கட்டளைப்போட்டிருந்ததாக தகவல் வெளியாகி இருந்தது. பொதுமக்களுக்குத் தொந்தரவு ஏற்படும் வகையில் எந்த செயலையும் செய்யக்கூடாது, அப்படிச் செய்தால் அது கட்சியின் பெயருக்கும் ஒரு எதிர்மறையான விமர்சனமாக அமைந்துவிடும் என்பதால் ரசிகர்களும், தொண்டர்களும் கூடுதல் பொறுப்புடன் இருக்க வேண்டும் என விஜய் அறிவுரை செய்திருந்ததாக கூறப்படுகிறது.
இந்த சூழலில், விஜயின் கட்டளையை மீறி ரசிகர்கள் மதுரை தவுட்டுச்சந்தையில், இருந்து பெரியார் பேருந்து நிலையம் வரையிலான பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செய்துள்ளது விமர்சனங்கள் எழுவதற்கு காரணமாக அமைந்துள்ளது.
கூட்டமாக ரசிகர்கள் சாலையில் நின்று கொண்டு கூச்சலிட்டு, ஹாரன் அடித்துக்கொண்டும் வாகனத்தை திருக்கிகொண்டு சத்தம்போட்டது அந்த பகுதியில் இருந்த மக்களுக்கு எரிச்சலை கொடுத்தது. பலரும் கோபத்துடன் தங்களுடைய வாகனங்களில் அமர்ந்துக்கொண்டு என்ன செய்வதென்று தெரியாமல் இருந்தனர்.
ரசிகர்கள் செய்த இந்த எரிச்சலான சம்பவத்தை பார்த்த பலரும், படத்தை மட்டும் கொண்டாடுங்கள் இது போன்ற செயல்களில் ஈடுபடாதீர்கள் எனவும், விஜய் சொல்லியும் கேட்கவில்லையா? எனவும் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.