ரூ.2000 கோடி முதலீடு., திருச்சி, மதுரையில் வேலைவாய்ப்புகள்.! முதலமைச்சர் அசத்தல் அறிவிப்பு.!
அமெரிக்காவை சேர்ந்த டிரில்லியன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் ரூ.2000 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தத்தம் கையெழுத்தாகியுள்ளது.
சென்னை : தமிழ்நாட்டில் முதலீடுகளை ஈர்க்க, புதிய தொழில் தொடங்க, தொழில்களை விரிவுபடுத்த என பல்வேறு வகையில் தொழில்துறையை மேம்படுத்தும் நோக்கில் பன்னாட்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுப்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்கா பயணம் மேற்கொண்டுள்ளார். 17 நாட்கள் பயணத்தில், தற்போது சிகாகோ சென்றுள்ள முதல்வர், அங்குள்ள தொழில் நிறுவன அதிகாரிகளை சந்தித்து வருகிறார்.
முன்னதாக சான் பிராசிஸ்கோ பயணம் மேற்கொண்டிருந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்டார். அதன் பிறகு, தமிழ்நாட்டில் சுமார் 900 கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன் மூலம் தோராயமாக 4000 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது.
அடுத்ததாக சிகாகோ சென்றுள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள பன்னாட்டு தொழில் நிறுவனங்களின் உயர் அதிகாரிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். சிகாகோவில் டிரில்லியன்ட், நைக் நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், ” டிரில்லியன்ட் நிறுவனத்துடன்ர் ரூ.2000 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மூலம் உற்பத்தி ஆலை மற்றும் அந்நிறுவன விரிவாக்கத்தை தமிழ்நாட்டில் நிறுவவுள்ளது. இந்த மதிப்புமிக்க கூட்டாண்மைக்கு ட்ரில்லியன்ட் நிறுவனத்திற்கு நன்றி.
Nike உடன் அதன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது மற்றும் சென்னையில் ஒரு உற்பத்தி ஆலை உருவாக்குவது, அது தொடர்பான ஆலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து இன்று ஆக்கப்பூர்வமான பேச்சு வார்த்தைகள் நடைபெற்றது.
ஏற்கனவே தமிழ்நாட்டில் 5,000 பேர் வேலை செய்து வரும் Optum நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. சுகாதாரத் துறைக்கான ஆலையை உருவாக்க திட்டமிட்டுள்ளது. திருச்சி மற்றும் மதுரையில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு ஆலோசிக்கப்பட்டது.” என பன்னாட்டு நிறுவனங்களுடன் தமிழ்நாட்டில் முதலீடு செய்வதற்கான பேச்சுவார்த்தை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டார்.