பாராலிம்பிக் : ஹாட்ரிக் பதக்கம் வென்ற வீரர் மாரியப்பனுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து!

பாராலிம்பிக் தொடரில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தொடர்ச்சியாக 3 முறை பதக்கம் வென்று சாதனைப் படைத்துள்ளார்.

MK Stalin - Mariyappan Thangavelu

சென்னை : நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் நேற்று நடைபெற்ற உயரம் தாண்டுதல் போட்டியில் தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலு வெண்கலப்பதக்கம் வென்று அசத்தினார். தொடர்ச்சியாக 3 பாராலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் 17-வது பாராலிம்பிக் தொடரில் நேற்று 6-ஆம் நாளுக்கான போட்டிகள் நடைபெற்றது. அதில், பாரா தடகளத்தில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி சார்பாகத் தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலு கலந்து கொண்டு விளையாடினார். தனது சிறப்பான விளையாட்டால் இறுதி சுற்றுக்கு முன்னேறிய அவர் 1.85 மீ. உயரம் தாண்டி வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.

கடந்த, 2016ம் ஆண்டு நடைபெற்ற ரியோ பாராலிம்பிக்கில் தங்கமும், 2020-ல் நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக்கில்
வெள்ளிப்பதக்கமும் கைப்பற்றி இருந்தார் மாரியப்பன் தங்கவேலு. இதனால், பாராலிம்பிக்கில் 3 பதக்கம் வென்ற 4-வது இந்திய வீரர் என்ற பெருமையை மாரியப்பன் தங்கவேலு படைத்துள்ளார்.

அது மட்டுமில்லாமல் தொடர்ச்சியாக 3 முறை பாரா ஒலிம்பிக்கில் பதக்கம் என்ற முதல் இந்தியர் என்ற வரலாற்றுச் சாதனையும் மாரியப்பன் தங்கவேலு படைத்துள்ளார். அதனைத் தொடர்ந்து சாதனைகளுடன் பதக்கம் வென்ற மாரியப்பனுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

மேலும், தமிழக முதல்வர் ஸ்டாலின் மாரியப்பனுக்குத் தனது ‘எக்ஸ்’ வலைத்தள பக்கத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துப் பதிவிட்டிருந்தார். அந்த பதிவில், “மூன்றாவது முறையாகப் பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்றுள்ள திரு.மாரியப்பன் தங்கவேலு அவர்களுக்கு வாழ்த்துகள். தன்னுடைய சாதனைகளால் பலருக்கும் ஊக்கமாகத் திகழும் நமது தங்கமகனின் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துகிறேன்”, எனப் பதிவிட்டிருந்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்