பாராலிம்பிக் : இந்தியாவுக்கு 2-வது தங்கம்! பதக்க பட்டியலின் நிலை என்ன?
நடைபெற்று வரும் பாராலிம்பிக் தொடரில் இந்தியா இன்றைய நாளில் மட்டும் இரண்டு பதக்கங்களை வென்று அசத்தியுள்ளது.
பாரிஸ் : பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடரின் 5-ஆம் நாள் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று வரை இந்திய அணி 7 பதக்கங்களை வென்ற நிலையில் இன்றைய நாளில் ஒரு தங்கம் மட்டும் ஒரு வெள்ளி என 2 பதக்கங்களைக் குவித்துள்ளது.
இன்று மதியம் நடைபெற்ற ஆண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் இந்தியா அணி சார்பாக விளையாடிய நிதேஷ் குமார் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
இதனால், இந்த பாராலிம்பிக் தொடரில் இந்தியாவிற்கு மேற்கொண்டு ஒரு தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது. இதற்கு முன் மகளீருக்கான 10மீ. ஏர் பிஸ்டல் போட்டியில் அவனி லெகரா தங்கம் வென்றிருந்தார்.
இன்று நடைபெற்ற பேட்மிண்டன் இறுதிப் போட்டியில் நிதேஷ் குமார், பிரிட்டன் நாட்டை சேர்ந்த டேனியல் பெத்தேலை எதிர்கொண்டு விளையாடினார். இந்த போட்டியில், நிதேஷுக்கு நெருக்கடி கொடுத்து டேனியல் விளையாடினார்.
ஆனாலும், மிகச் சிறப்பாக அவரை எதிர்கொண்டு விளையாடிய நிதேஷ் 21-14 , 18-21 , 23-21 என்ற செட் கணக்கில் வென்று தங்கப் பதக்கத்தை வென்றார். இது இந்த பாராலிம்பிக் தொடரில் இந்தியா வென்ற 2-வது தங்கம் ஆகும்.
மேலும், அதற்கு முன் நடைபெற்ற ஆண்களுக்கான வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் இந்திய அணி சார்பாகக் கலந்து கொண்டு விளையாடிய யோகேஷ் கதுனியா 42.22மீ. தூரம் வரை வட்டு எறிந்து வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
இவருடன் போட்டியிட்ட பிரேசில் நாட்டு வீரரான கிளாடினி பாடிஸ்டா 46.86 மீ தூரம் வரை எறிந்து தங்கப்பதக்கத்தை முத்தமிட்டார். இதன் மூலம் நடைபெற்று வரும் இந்த 17-வது பாராலிம்பிக் தொடரில் இன்றைய நாளில் மட்டும் 2 பதக்கங்களை வென்றுள்ளது.
இன்று, வென்ற இந்த 2 பதக்கங்களைச் சேர்த்து இந்திய மொத்தமாக இந்த பாராலிம்பிக்கில் 9 பதக்கங்களை (2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம்) வென்று பதக்க பட்டியலில் 22-வது இடத்திலிருந்து வருகிறது.