கொல்கத்தா விவகாரம் : 3 டிவி சேனலை புறக்கணித்த மம்தா பானர்ஜி.!
வங்காளத்திற்கு எதிராக பிரச்சாரம் செய்ததற்காக மூன்று தொலைக்காட்சி செய்தி சேனல்களை புறக்கணிப்பதாக டிஎம்சி அறிவித்துள்ளது.
கொல்கத்தா : கடந்த மாதம் கொல்கத்தாவில் உள்ள ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரியில் பயிற்சி மருத்துவர் ஒருவர் கொடூரமான முறையில் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்வளைகளை ஏற்படுத்தியது.
இந்த சம்பவத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக வலியுறுத்தி வரும் நிலையில், மருத்துவர்களும் மாணவர்களும் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் (ஏஐடிசி) தனது கட்சியின் செய்தித் தொடர்பாளர்களை மூன்று தொலைக்காட்சி செய்தி சேனல்களான ஏபிபி ஆனந்தா, ரிபப்ளிக், மற்றும் டிவி9 ஆகியவற்றிற்கு அனுப்பப்போவதில்லை என்று இப்போதைக்கு முடிவு செய்துள்ளது.
திரிணாமுல் காங்கிரஸ் தனது அறிக்கையில் கூறியதாவது, ஏபிபி ஆனந்தா, ரிபப்ளிக் மற்றும் டிவி9 ஆகிய டிவி சேனல்களில் நடைபெறும் செய்தி விவாதங்களுக்கு கட்சி செய்தி தொடர்பாளர்களை அனுப்பாது என தெரிவித்துள்ளது.
மாநில அரசுக்கு எதிராக வங்காள எதிர்ப்பு நிகழ்ச்சி நிரல் சார்ந்த பிரச்சாரத்தை நடத்தியதற்காக, அந்த மூன்று தொலைக்காட்சி செய்தி சேனல்களைப் புறக்கணிக்க அக்கட்சி முடிவு செய்துள்ளது.