மருத்துவர்களுக்காக களமிறங்கிய தமிழக அரசு.! சிசிடிவி கேமிரா முதல்., காவல்துறை மையம் வரை…
தமிழ்நாட்டில் மருத்துவ ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மருத்துவமனை வளாகத்தில் பல்வேறு பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்குனரகம் தெரிவித்துள்ளது .
சென்னை : கடந்த மாதம் (ஆகஸ்ட் 9) கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் மருத்துவக்கல்லூரி வளாகத்தின் உள்ளேயே பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் தற்போது வரையில் குற்றவாளிகள் உறுதிசெய்யப்படாத நிலையில் சிபிஐ தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
இந்த சம்பவத்தை அடுத்து பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோருக்கு கடுமையான தண்டனைகளை விரைந்து வழங்க வேண்டும், பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை மத்திய மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி பல்வேறு கட்ட போராட்ட்டங்கள் தற்போது வரையில் நடைபெற்று வருகின்றன.
இப்படியான சூழலில் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் குறிப்பாக பெண் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் தமிழக மருத்துவத்துறை பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. இந்த சுற்றறிக்கையை தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்குனர் ராஜமூர்த்தி அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பியள்ளார்.
அந்த சுற்றறிக்கையின் படி, தமிழ்நாட்டில் உள்ள மருத்துவமனை வளாகத்திலும் கட்டாயம் காவல்துறை மையம் அமைக்கப்பட வேண்டும். மருத்துவமனை வளாகம் முழுவதும் சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட வேண்டும். மருத்துவமனைகளில் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் பாதுகாப்பு மற்றும் ஆலோசனை என 2 தனித்தனி குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்.
மருத்துவமனையில் குறிப்பிட்ட நேரத்தில் மட்டுமே உள்நோயாளிகளை பார்க்க பார்வையாளர்களை அனுமதிக்க வேண்டும். பார்வையாளர்களுக்கு அதற்குரிய உரிய அடையாள அட்டை கொடுக்கப்பட வேண்டும். இரவு நேரத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய மருத்துவமனையை சுற்றி மின்விளக்குகள் கண்டிப்பாக அமைக்கப்பட வேண்டும்.
மருத்துவ ஊழியர்களை தாக்கினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எழுதப்பட்ட பதாகைகளை மருத்துவமனை வளாகத்தில் வைக்க வேண்டும் என மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவ ஊழியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய கட்டுப்பாடுகளை தமிழ்நாடு மருத்துவ மற்றும் ஊரக நலப் பணி இயக்குனரகம் விதித்துள்ளது.