வார முதல் நாளில் உச்சம் தொட்டு வரலாறு படைத்த சென்செக்ஸ்! காரணம் என்ன?
கடந்த வாரம் சரிவை காணாத இந்திய பங்குச்சந்தைகள் இந்த வாரமும் ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கி இருக்கிறது.
சென்னை : செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்தில் முதல் நாளிலேயே இந்தியப் பங்குச்சந்தை புதிய உச்சத்தைத் தொட்டு வரலாறு படைத்துள்ளது. இதனால், முதலையீட்டாளர்களும் மிகுந்த உற்சாகத்திலிருந்து வருகின்றனர். இன்று காலை வழக்கம் போல வர்த்தகம் தொடங்கிய போது மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ் 359.51 புள்ளிகள் உயர்ந்தது.
இதனால், 82,725.28 என்ற புள்ளிகள் பெற்று புதிய உச்சம் கண்டு வரலாறு படைத்தது. அதே வேளையில், தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 97.75 புள்ளிகள் உயர்ந்து 25,333.65 என்ற புள்ளியில் வர்த்தகம் நடைபெற்றது. இப்படி தொடக்கத்திலே சென்செக்ஸ் உச்சம் பெற்று வர்த்தகம் நடைபெற்று வந்த நிலையில், சிறிதளவு கூட சரிவைக் காணவில்லை. அதே வேலை சென்செக்ஸ் ஏற்றம் கண்டது போல நிஃப்டி ஏற்றம் காணவில்லை.
மேலும், தொடர்ந்து புள்ளிகள் உச்சம் பெற்று வந்த நிலையில் சரியாக 3.30 மணிக்கு அதாவது இன்றைய வர்த்தக நாள் முடிவில் சென்செக்ஸ் 82,559 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது. அதே போலத் தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியும் 25,278 புள்ளிகளில் முடிவடைந்துள்ளது. கடந்த 2 மாதங்கள் நடைபெற்ற வர்த்தகத்தில் இதுவே அதிக புள்ளிகளுடன் நிறைவு பெற்ற நாளாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
காரணம் :
அமெரிக்கப் பங்குச்சந்தைகளில் நிலவும் சாதகமான வர்த்தகத்தின் எதிரொலியாகவும், அமெரிக்க பெடரல் வங்கி தனது வட்டி விகிதத்தில் குறைக்கக் கூடும் என்ற நம்பிக்கை அதிகரித்துள்ளதாலும் இந்தியப் பங்குச்சந்தைகளில் இப்படி ஏற்றம் நிலவி வருகிறது. மேலும், இந்தியப் பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுவதால் மும்பை பங்குச்சந்தையான சென்செக்ஸ்ஸில் இது எதிரொலித்துள்ளது என கூறி வருகின்றனர்.
பஜான் ஃபைனான்ஸ், ஹெச்சிஎல் டெக், ஐடிசி டெக் மஹிந்திரா இன்ஃபோசிஸ், ஏசியன் பெயின்ட்ஸ் ஆகிய பங்குகள் இன்று ஏற்றம் கண்டுள்ளதெனவும் டாடா மோட்டார்ஸ் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா. என்டிபிசி, பாரதி ஏர்டெல் ஆகிய பங்குகள் இன்று இறக்கம் கண்டுள்ளதெனவும் தகவல் வெளியாகி இருக்கிறது.