அரசியல் களத்தில் திணறும் த.வெ.க? மாநாட்டில் இருக்கும் பெரிய சிக்கல்?
விக்கிரவாண்டி : தவெக மாநாட்டிற்கு அனுமதி கோரப்பட்டுள்ள நிலையில், 21 கேள்விகள் அடங்கிய நோட்டீஸை அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த்-க்கு விழுப்புரம் காவல்துறை அனுப்பியுள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சிக் கொடி அறிமுகம் செய்யப்பட்டதை தொடர்ந்து, அடுத்த அரசியல் நகர்வாக கட்சியின் முதல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்துவதற்கான ஏற்பாடுகளில் இறங்கியுள்ளார். த.வெ.க கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வைத்து நடைபெறவுள்ள விஷயம் அனைவருக்கும் தெரிந்தது தான். இது தொடர்பாக கடந்த, ஆகஸ்ட் 28-ஆம் தேதி கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மாநாடு நடத்த அனுமதிக்கேட்டு, விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கி இருந்தார்.
முன்னதாக, செப்டம்பர் 22-ஆம் தேதி நடத்த திட்டமிட்ட நிலையில், 23ஆம் தேதிக்கு அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான பரிசீலனை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்த்து பரிசீலனை செய்த பிறகு தான் அனுமதி வழங்கப்படுமா? அல்லது மறுக்கப்படுமா? என்பது தெரியவரும் எனவும் கூறப்பட்டது.
காவல் துறை வைத்தகேள்விகள்
இந்த சூழலில், விழுப்புரம் மாவட்ட காவல் துறை தவெக கட்சியின் முதல் மாநில மாநாட்டுக்கு செய்யப்படவிருக்கும், ஏற்பாடுகள் குறித்து 21 கேள்விகள் அடங்கிய கடிதத்தை தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்துக்கு நோட்டீஸ் அனுப்பி, அதில் கேட்கப்பட்டுள்ள கேள்விகளுக்கு 5 நாட்களுக்குள் பதிலளிக்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- முக்கிய பிரமுகர்கள், தொண்டர்கள் வரும் பாதைக்கான ஏற்பாடு என்ன?” த.வெ.க மாநாட்டிற்கு எத்தனை வாகனங்கள் வருவதற்கான வாய்ப்பு உள்ளது?
- மாநாட்டில் பங்கேற்க வரும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு ஏற்பாடு என்ன?
- மாநாட்டில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு உணவு எப்படி வழங்கப்பட உள்ளது?
- மாநாடு முடிந்த பிறகு அங்கே இருக்கும் குப்பைகளை சுத்தம் எப்படி செய்வது?
என மொத்தம் 21 கேள்விகள் அடங்கிய நோட்டிஸ் அனுப்பப்பட்டிருக்கும் சூழலில், அதற்க்கு பதில் அளித்த பிறகு தான் மாநாட்டுக்கு அனுமதி கிடைக்குமா? இல்லையா என்பது தெரிய வரும்.
சொன்ன தேதியில் மாநாடு
இதனையடுத்து, மாநாட்டிற்கான தேதி இந்த மாதத்திற்குள் கிடைக்கவில்லை என்றால், வருகின்ற ஜனவரி மாதத்திற்கு மேல் மாநாடு தள்ளிப்போக வாய்ப்புள்ளதாகவும், அக்டோபர், நவம்பர் மழைக்காலம் என்பதால் அந்த மாதங்களில் மாநாடு நடத்துவது உகந்தது அல்ல எனவும் முடிவு எடுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியானது. இந்நிலையில், அந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் திட்டமிட்டபடி, செப்டம்பர் 23-ம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு நடைபெறும் என உறுதியளித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியிருக்கிறது. காவல்துறை கேட்டுள்ள 21 கேள்விகளுக்கு பதில் அளித்து அனுமதிப்பெறுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.
அரசியல் களத்தில் திணறும் த.வெ.க?
மேலும், அரசியல் கட்சி தொடங்கியதை தொடர்ந்து தவெக சிக்கல்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக, கட்சிக் கொடி அறிமுகம் செய்த பிறகு (தவெக) கொடியில் இருந்து சண்டையிடும் யானைகளின் உருவத்தை நீக்க வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி (பிஎஸ்பி) கட்சிக்கொடி வெளியான சமயத்திலேயே கோரிக்கை விடுத்திருந்தனர்.இந்த கோரிக்கை நிறைவேற்றப்படாவிட்டால், இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டு வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் பகுஜன் சமாஜ் கட்சி நிர்வாகிகள் தெரிவித்திருந்தனர்.
அதைப்போலவே, த.வெ.க கட்சிக் கொடியானது வெள்ளாளர் முன்னேற்றக் கழக சமுதாயக் கொடி நிறத்தை ஒத்துபோய்யுள்ளது என்ற பேச்சுகளும் எழுந்தது. இதனைத்தொடர்ந்து அடுத்ததாக தற்போது மாநாடு நடைபெறுவதில், சிக்கல் ஏற்பட்டு இருக்கிறது. மேலும், காவல்துறை அனுமதி அளித்த பிறகு, விரைவில் மாநாடு நடைபெறவுள்ளது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.