தெலுங்கு திரையுலகில் பாலியல் தொல்லை.. அறிக்கை வெளியிடுங்க! சமந்தா போட்ட பதிவு…
தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக விசாரித்த குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என நடிகை சமந்தா வலியுறுத்தியுள்ளார்.
தெலுங்கானா : தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லைகள் தொடர்பாக விசாரித்த குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என நடிகை சமந்தா வலியுறுத்தியுள்ளார்.
இதன் மூலம் தெலுங்கு திரையுலகிலும் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கிறதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஏற்கனவே, டோலிவுட்டில் காஸ்டிங் கவுச் பற்றி சில ஹீரோயின்கள் பேசியது குறிப்பிடத்தக்கது. இருந்தாலும், சமந்தாவின் இந்த பதிவு தெலுங்கு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹேமாகமிட்டி அறிக்கைக்கு பின், மலையாள சினிமாவில் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுகள் அதிகமாக வெளிவர துவங்கி உள்ளன. சிலர் மீது வழக்கும் பதிவாகி உள்ளது. ஒட்டுமொத்த மலையாள நடிகர் சங்கமும் (AMMA)கலைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஹேமா கமிட்டியின் முழு அறிக்கையையும் தாக்கல் செய்ய வேண்டும் என்று கேரள அரசுக்கு தேசிய மகளிர் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. இதை ஏற்றுகொண்டு முழு அறிக்கையையும் கேரள அரசு மகளிர் ஆணையத்திடம் தாக்கல் செய்தால், இதுவரை வெளிவராத பல பெயர்களும், திடுக்கிடும் தகவல்களும் வெளிச்சத்துக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதனிடையே, மலையாள நடிகர்கள், இயக்குனர்கள், கலைஞர்கள் மீதான பாலியல் அத்துமீறல் புகார்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. ஏற்கனவே, மேற்குவங்க நடிகை அளித்த புகாரின் பேரில் பிரபல டைரக்டர் ரஞ்சித் மீதும், திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு நடிகை அளித்த புகாரில் பிரபல நடிகர் சித்திக் மீதும் பாலியல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
இந்த சூழலில், தெலுங்கு திரையுலகில் நடக்கும் பாலியல் தொல்லை தொடர்பான விசாரணைக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும் என தெலுங்கு திரைப்படத் துறை அம்மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளது.
இந்த அறிக்கையை நடிகை சமந்தா தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில், ” கேரளா துறையின் ஹேமா கமிட்டி முயற்சிகளைப் பாராட்டி, தெலுங்கு திரையுலகில் பெண்களுக்கு ஆதரவாக ‘தி வாய்ஸ் ஆஃப் வுமன்’ என்கிற அமைப்பு 2019-ல் உருவாக்கப்பட்டது. ஹேமா கமிட்டியை போல், தி வாய்ஸ் ஆஃப் வுமன் குழுவின் அறிக்கையை அரசாங்கம் உடனடியாக வெளியிட வேண்டும்.
‘தி வாய்ஸ் ஆஃப் வுமன்’ குழு கேரளாவின் பாதையைப் பின்பற்ற வேண்டும். டோலிவுட்டிலும் கேரளா பாணியில் பெண்கள் குழு அமைக்க வேண்டும் என்று சமந்தா கூறியுள்ளார். இதனால், பெண்களுக்கு பாதுகாப்பானசூழல் ஏற்படம். ஆனால், இன்னும் பலர் இணைந்து போராட வேண்டும். இருந்தாலும் இது மாற்றத்திற்கான துவக்கமாக இருக்கும் என நம்புகிறேன் ” என குறிப்பிட்டுள்ளார்.