வாழையடி-ஐ தழுவி செல்கிறதா வாழை.? பாமர படைப்புகளுக்குள் உள்ள ஒற்றுமைகள் என்னென்ன.?
சென்னை : வாழை திரைப்படத்திற்கும் வாழையடி சிறுகதைக்கும் உள்ள சிறு ஒற்றுமையையும் குற்றிப்பிடதக்க மாற்றங்களையும் இந்த செய்திக்குறிப்பில் காணலாம்.
பாமர மக்களின் வலியை, அவர்கள் கடந்து வந்த கரடு முரடான பாதைகளை தனக்கறிந்த திரைமொழி வாயிலாக சமரசமில்லாமல் மக்கள் மனதில் பதிய வைப்பதில் திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் மற்ற படைப்பாளிகளில் இருந்து தனித்துவம் பெறுகிறார். அவரது இயக்கத்தில் சமீபத்திய வரவாக திரையில் விருந்தளித்து வருகிறது “வாழை”.
தமிழ் திரையுலகிற்கு பொதுவாகவே ஓர் சாபமா அல்லது தற்செயல் சம்பவமா என தெரியவில்லை. மக்கள் மத்தியில் பேசப்படும், கொண்டாடப்படும் திரைப்படங்கள் ஏதேனும் ஒரு சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்றாகவே ஆகிப்போனது. அதில் “வாழை” மட்டும் விதிவிலக்கா என்ன.?
தான் சிறு வயதில் கடந்து வந்த சேறுகள் நிறைந்த , வாழையின் சுமைகள் (வலிகள்) தாங்கிய சுவடுகளை திரைக்கேற்றவாறு சில கற்பனைகள் கடந்து அதன் சுவை(மை) குறையாமல் நம் மனதில் இறக்கி இருந்தார் இயக்குனர் மாரி செல்வராஜ். வாழைத்தார் சுமக்க அடம் பிடிக்கும் சிறுவர்கள், ஸ்ட்ரைக்கை பார்த்து சந்தோஷத்தில், நாளை தார் சுமக்க செல்ல வேண்டாம்’ என்ற உற்சாகத்தில் பள்ளிக்கு சென்று , தனது மழலை காதலை பூங்கொடி டீச்சரிடம் கர்சீப் வழியாக பகிர்ந்து கொண்டு வீடு திரும்புகையில் ,’பிரச்சனை சரியாகிவிட்டது மீண்டும் தார் சுமக்க போகணும்’ எனும் ஊர்காரரின் வார்த்தை கேட்டு அந்த ‘சிறு’நாயகன் வேதனை எனோ நம்மை அறியாமல் நம்மிடம் ஓட்டிக்கொள்கிறது.
ரஜினி , கமல் சண்டை, பூங்கொடி டீச்சர் மீதான ஈர்ப்பு, கர்சீப் , விஜய் படம் போட்ட நோட்டு புத்தகம், வேளைக்கு செல்லாமல் இருக்க முள் குத்தி காலை கிழித்த சம்பவம் என பல்வேறு காட்சிகள் மூலம் பலரையும் அவர்கள் பால்யத்திற்கு அழைத்து செல்ல தவறவில்லை நம் மாரி செல்வராஜ்.
அதே வேளையில், தார் சுமக்க கூலி உயர்த்தி கேட்கும் உரிமை, முதலாளியுடன் பகை, கம்யூனிஸ்ட் குறியீடுகள், அம்பேத்கர் கருத்தியல் என தனது பாணியில் இருந்தும் கொஞ்சமும் விலகாத எழுத்தாளர் மாரி செல்வராஜும் நம்மை ஈர்க்க தவறவில்லை. இறுதியில் தன் வாழ்வில் சந்தித்த பெருந்துயர நிகழ்வை பட காட்சி வழியாகவும், பாடல் காட்சி வழியாகவும் காண்போர் இதயத்தை கணக்க செய்து கண்ணீர் வரவழைத்தது இந்த “வாழை”.
அதே வேளையில், கூகை, சூல் நாவல்கள் எழுதிய சாகித்ய அகாடமி வென்ற எழுத்தாளர் சோ.தர்மன் எழுதிய “நீர்ப் பழி” எனும் சிறுகதை தொகுப்பில் “வாழையடி..” எனும் சிறுகதையை ஒத்துபோய்யுள்ளது என சிலர் கூறி வருகின்றனர். ஆனால் இந்த முழுக்கதையும் தன்னுடையது என்று எழுத்தாளர் வத்திடவேயில்லை அதுதான் அவர் படைப்புகளுக்கு கொடுக்கும் மரியாதை. அதே வேளையில் தான் 10 ஆண்டுகளுக்கு முன்னரே எழுதிவிட்டேன் என்ற கர்வமும் சற்றும் குறையவில்லை.
வாழையடி சிறுகதையை, தனது உறவுக்காரர் திருவைகுண்டம் அருகே பொன்னங்குறிச்சியில் வாழை விவசாயம் செய்வதை பார்த்தேன். அங்கு சிறுவர்கள் வாழைத்தார் சுமக்கும் கஷ்டத்தை நேரில் பார்த்து அதனை சிறுகதையாக எழுதினேன். தவிர டீச்சர், கர்சீப், கம்யூனிஸ்ட் அடையாலங்கள், லாரி விபத்து என எதுவும் அந்த சிறுகதையில் கிடையாது என வெளிப்படையாக கூறியுள்ளார் எழுத்தாளர் சோ.தர்மன்.
அதே நேரம், சிறுவர்கள் வாழைத்தார் சுமக்கும் போது படும் கஷ்டம், இடைத்தரகர், முதலாளி, கூலி உயர்வு போன்ற அமசங்கள் எனது சிறுகதையுடன் ஒத்துப்போகின்றன. வாழை கொண்டாடப்பட சந்தோஷப்படுகிறேன். 10 ஆண்டுகளுக்கு முன்பு அதனை எழுதியதை கண்டு எழுத்தாளனாக கர்வம் கொள்கிறேன் என தனது சமூக வலைதளத்தில் குறிப்பிட்டுள்ளார் சோ.தர்மன்.
வாழையடி கதையில், லாரி ஓட்டுனரும், ஊர்மக்களை அழைத்துச்செல்லும் கங்காணியும் கூலி உயர்வு பற்றி பேசுவதில் ஆரம்பித்து, பின்னர் ஊர் மக்களை லாரியில் ஏற்றி சென்று வாழை தார் சுமக்க வைக்கும் நிகழ்வு, தார் சுமந்த அடையாளமாக தரப்படும் டோக்கன், தார் சுமக்கையில் தடுமாறி கிழே விழுந்து டோக்கனை தொலைத்த பெண் தனது டோக்கனை தொலைந்ததால் தனக்கான சம்பளம் கிடைக்காதே என்றே ஏக்கத்தையும், கிழே விழுந்ததில் தனது உடல் வலியையும் கூறி அழுவதோடு சிறுகதை முடியும். இந்த சிறுகதையை தனக்கே உரித்த கரிசல்காட்டு மண் வாசனையோடு சோ.தர்மன் எழுதி இருப்பார்.
ஒரு பக்கம் 10 ஆண்டுகளுக்கு முன்பே எழுதிய “வாழையடி” சிறுகதையின் நீட்சியாக “வாழை” பார்க்கப்டுகிறது. மறுபக்கம் ரத்தமும் சதையுமாக அதே களத்தில் தான் சந்தித்த வலியை தானே எழுதி இயக்கிய திரை எழுத்தாளர் மாரி செல்வராஜின் படைப்பாக “வாழை” கொண்டாடப்படுகிறது. எது எவ்வாறாயினும் இந்த கதை என்னுடையது என குழாயடி சண்டையிடாமல் இருவரும் ஒருவரையொருவர் பாராட்டி மகிழும் பண்பு எழுத்தாளர்களுக்கே உரிய உயரிய குணம் என்றே கூற வேண்டும்.
“வாழை”, “வாழையடி..” கொண்டாடப்படுவதை காட்டிலும், அந்த வலியை உணர்வதே இரு படைப்புகளுக்கும் நாம் அளிக்கும் உயரிய மரியாதையாக இருக்கும்.