பாராலிம்பிக் : அவனிக்கு “தங்கம்” மோனாவுக்கு “வெண்கலம்”! பதக்க வேட்டையை தொடங்கியது இந்தியா!
பாரிஸ் : பாராலிம்பிக் 10மீ. துப்பாக்கி சுடுதல் போட்டியில் அவனி லெகரா தங்கப் பதக்கமும், மோனா அகர்வால் வெண்கலமும் வென்று அசத்தியுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரமான பாரிஸில் 17-வது பாராலிம்பிக் தொடரானது நடைபெற்று வருகிறது. இதில் தற்போது நடைபெற்ற 10மீ. ஏர் பிஸ்டல் இறுதி போட்டியில் இந்திய அணி சார்பாக கலந்து கொண்ட அவனி லெகரா தங்கம் வென்றார். அதே இறுதி போட்டியில் மோனா அகர்வால் வெண்கல பதக்கமும் வென்றுள்ளார். இந்த முறை பாராலிம்பிக் தொடரில் இந்திய அணியின் பதக்கபட்டியலை ஒரே போட்டியில் 2 பதக்கங்களுடன் தொடங்கி வைத்துள்ளனர்.
இதற்கு முன் நடந்த இறுதி போட்டிக்கான தகுதி சுற்றில் சிறப்பாக விளையாடிய அவனி, 625.8 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். மேலும், தனது சிறப்பான விளையாட்டால் 5-ஆம் இடம் பிடித்து இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார் மோனா அகர்வால்.
இறுதிச்சுற்று ஆட்டம் தொடங்கியதில் இருந்து, ஆரம்பம் முதலே அவானி லெகரா முதலிடத்தில் வகித்து வந்தார். அதே போல் மோனா அகர்வாலும் முதல் 3 இடங்களில் நீடித்து வந்தார். இதனால் இந்தியாவுக்கு கட்டாயமாக 2 பதக்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்பட்டது. அதன்படி அந்த இறுதி போட்டியில் அவானி லெகரா 145.9 புள்ளிகளையும், மோனா அகர்வால் 144.8 புள்ளிகளையும் எட்டிய போது இந்தியாவுக்கு 2 பதக்கங்கள் உறுதியானது.
10 மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் எஸ்ஹெச் 1 பிரிவில் அவானி லெகாரா 249.7 புள்ளிகள் பெற்று பாராலிம்பிக்ஸ் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார். இதுவரை இந்த புள்ளியை யாரும் தொட்டதே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் பாராலிம்பிக்ஸ் தொடரின் 2-வது நாளிலேயே 2 பதக்கங்களை கைப்பற்றி இந்தியா பதக்க வேட்டையை தொடங்கி இருக்கிறது. பதக்கம் வென்ற வீர மங்கையர்களுக்கு ரசிகர்கள் பலரும் இணையத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.