“தமிழகம் உங்களை வரவேற்க காத்திருக்கிறது.,” அமெரிக்காவில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின்…
சென்னை : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 17 நாட்கள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தமிழ்நாட்டிற்கு அதிகளவில் தொழில் முதலீடுகளை ஈர்க்க வழிவகை செய்யும் வகையில் இந்த 17 நாட்கள் பயணம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் முதற்படியாக இன்று நோக்கியா, பேபால் உள்ளிட்ட 6 பன்னாட்டு நிறுவனங்கள் 900 கோடி ரூபாய் அளவுக்கு தமிழ்நாட்டில் முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
சான் பிராசிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர் மாநாட்டில் பன்னாட்டு நிறுவன அதிகாரிகள் மத்தியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ” வளர்ச்சி மிகுந்த தமிழ்நாட்டிற்கு தொழில் தொடங்க வருமாறு உங்களை அழைக்க நான் இங்கு வந்திருக்கிறேன். தமிழ்நாட்டிற்கும் அமெரிக்காவுக்கும் இடையேயான தொழில் முறை உறவு எப்போதும் பலமாக இருந்துள்ளது.
300க்கும் அதிகமான அமெரிக்க நிறுவனங்கள் தமிழகத்தில் தங்கள் தொழில்களை நிறுவியுள்ளன. சான் பிரான்சிஸ்கோ மற்றும் கலிபோர்னியாவில் இருந்து எங்களது வரவேற்பை ஏற்று இங்கு வந்திருக்கும் அனைவரையும் நான் வரவேற்கிறேன். சான் பிரான்சிஸ்கோ சிலிக்கான்வேலி பகுதியானது தொழில்நுட்பத்துறை வளர்ச்சிக்கு பெயர் பெற்ற பகுதி என உலகமறிந்த உண்மை. தமிழ்நாட்டின் முன்னேற்ற பயணத்திற்கு பயனளிக்கக்கூடிய துறைகளைப் பற்றி விவாதிக்க, அமெரிக்காவில் உள்ள தொழில்முறைத் தலைவர்களை ஒரு பொது மேடையில் கொண்டு வருவதே இந்த மாநாட்டின் முக்கிய குறிக்கோள்.
ஏராளமான வளங்கள், திறன்மிகு பணியாளர்களால் தமிழகம் வெகுவாக ஈர்க்கப்படுகிறது. மக்களின் ஆற்றலை தமிழ்நாடு நன்கு பயன்படுத்துகிறது. தமிழ்நாட்டின் மக்கள் தொகையில் இளைஞர்கள் மற்றும் வேலைசெய்யும் வயதினர்களின் எண்ணிக்கை சற்று அதிகம். 2030 ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக உயர்த்த வேண்டும் என்பது எங்களது குறிக்கோள்.
கடந்த மூன்று ஆண்டுகளில் 3.1 மில்லியன் நபர்களுக்கு நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்பு உருவாக்கும் வகையில், 120.4 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடுகளை ஈர்த்துள்ளோம். அதற்கான இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகிலேயே வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தியா அமெரிக்க நாடுகளுக்கு இடையேயான பொருளாதார உறவுகள் மிகப்பெரும் அளவு எழுச்சிக் கொண்டுள்ளது. தெற்காசியாவில் முதலீடுகளை ஈர்க்க உகந்த மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில் நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை நிறுவியுள்ளன.
ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் நல்லுறவின் அடிப்படையில் தான், நாம் வளர முடியும். இந்தியா மற்றும் அமெரிக்காவுக்கு இடையே நல்லுறவை தமிழ்நாடு முன்னேற்றத்திற்கு அமெரிக்கா பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். உயர்ந்த மனித வாழ்வியல் நெறியை கொண்ட நாடு அமெரிக்கா. இந்த அடிப்படையில் தமிழ்நாடு பொருளாதார மேம்பாட்டிற்கு நீங்கள் பங்களிக்க வேண்டும். முதலீட்டாளர்களை சிவப்பு கம்பளம் விரித்து தமிழகம் உங்களை வரவேற்க தயாராக உள்ளது.” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.