இன்று தொடங்கும் “17வது பாராலிம்பிக்ஸ்”! களமிறங்கும் 6 தமிழர்கள்!
பாரிஸ் : மாற்றுத்திறனாளிகளுக்கான 17-வது பாராலிம்பிக் தொடரானது இன்று பாரிஸில் கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.
உலகம் முழுவதும் மிகப்பெரிய விளையாட்டு தொடராகக் கருதப்படும் ஒலிம்பிக் போட்டிகள் சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்று முடிவடைந்திருந்து. அதனைத் தொடர்ந்து இன்று இரவு பாரிஸில் பாராலிம்பிக் தொடரானது கலைநிகழ்ச்சிகளுடன் கோலாகலமாகத் தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தமாக 180 நாடுகளில் 4,440 வீரர்/வீராங்கனைகள் பங்கேற்று விளையாடவுள்ளனர்.
இந்த தொடரில் இந்தியா சார்பாக மொத்தம் 84 வீரர், வீராங்கனைகளுடன் களமிறங்கவுள்ளனர். கடந்த 2020 பாராலிம்பிக் தொடரில் இந்திய அணி 54 வீரர்/ வீராங்கனைகளுடன் கலந்து கொண்டு மொத்தம் 19 பதக்கங்களை வென்று 24-வது சாதித்திருந்தது. இந்த முறை 84 வீரர்/வீராங்கனைகளுடன் பல்வேறு போட்டிகளில் இந்தியா கலந்து கொள்வதால் சென்ற வருடத்தை விட அதிகமாகவும் பதக்கம் எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று தொடங்கும் இந்த பாராலிம்பிக் தொடரில் இந்திய அணியில் தமிழக வீரர்களாக மொத்தம் 6 பேர் கலந்து கொண்டு விளையாட இருக்கிறார்கள். அதிலும் 4 பேர் பேட்மிண்டன் விளையாட்டிலும், இரண்டு பேர் தடகள போட்டிகளிலும் கலந்து கொண்டு விளையாடவுள்ளனர். இந்திய அணி சார்பாக உயரம் தாண்டுதல் போட்டியில் இந்த முறையும் தமிழக வீரரான மாரியப்பன் தங்கவேலு களம் காண்கிறார்.
பாராலிம்பிக்கில் களமிறங்கும் தமிழக வீரர்கள் :
மாரியப்பன் தங்கவேலு
பாராலிம்பிக்கின் பதக்க நாயகன் என்றே இவரை சொல்லலாம். இதற்கு முன் நடைபெற்ற 2016 ரியோ ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதன் பிறகு 2020-ல் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக்கில் உயரம் தாண்டுதல் போட்டியில் வெள்ளிப்பதக்கமும் வென்றுள்ளார். இதனால் இந்த முறை ஹாட்ரிக் பதக்கம் வெல்வாரா என்று இவர் மீது எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
துளசிமதி முருகேசன்
மகளீர் பேட்மிண்டன் பிரிவில் பங்கேற்று விளையாடவிருக்கும் இவர் இதற்கு முன் பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்லவில்லை. ஆனால், ஆசிய பாராலிம்பிக் தொடரில் பங்கேற்று தங்கம், வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்று அசத்தியுள்ளார். இந்த முறை இவர் பதக்கம் வெல்வார் என எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
மனிஷா ராமதாஸ்
மகளீர் பேட்மிண்டன் பிரிவில் விளையாடவிருக்கும் மற்றொரு வீராங்கனை மனிஷா. இவர் உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப்பில் 2022-ம் ஆண்டு தங்கப்பதக்கமும், இந்த ஆண்டு வெளிப்பதக்கமும் வென்றுள்ளார். இதனால், இந்த பாராலிம்பிக் தொடரில் பதக்கம் வெல்லும் முக்கிய வீரராக பார்க்கப்படுகிறார்.
நித்யா ஸ்ரீ சிவன்
மகளீர் பேட்மிண்டன் பிரிவில் தமிழகம் சார்பாக விளையாடவிருக்கும் 3-வது வீராங்கனை. இவர் பாராலிம்பிக்கில் இதுவரை பதக்கம் பெறவில்லை. ஆனால், 2022-ம் ஆண்டு பேட்மிண்டன் ஆசிய பாரா தொடர்களில் 2 முறை வெண்கல பதக்கம் வென்றுள்ளார்.
சிவராஜன் சோலைமலை
ஆண்களுக்கான பேட்மிண்டன் போட்டியில் தனி நபர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் தமிழக சார்பாக களமிறங்கும் வீரர். 2023ல் நடந்த ஆசிய பாரா விளையாட்டுப் போட்டியில் கலப்பு இரட்டையர் பிரிவில் வெள்ளி வென்றார். பின் அதே ஆண்டில் பிரேசிலில் நடைபெற்ற பாரா-பேட்மிண்டன் சர்வதேச போட்டியில் நித்யா ஸ்ரீ சிவனுடன் இணைந்து கலப்பு இரட்டையர் தங்கப் பதக்கம் வென்றார்.
கஸ்தூரி ராஜாமணி
இந்த பாராலிம்பிக்கில் பவர் லிப்டிங் விளையாட்டில் மகளீருக்கான 67 கிலோ எடைப்பிரிவில் தமிழகம் சார்பாக களமிறங்கும் வீராங்கனை தான் கஸ்தூரி ராஜாமணி. இவர் 2022-ம் ஆண்டு சீனாவில் நடைபெற்ற ஆசிய பாரா விளையாட்டிலும் கலந்து கொண்டு விளையாடினார். இதுவரை எந்த பதக்கமும் இவர் பெறவில்லை என்றாலும் இவர் மீதும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.