விக்கிரவாண்டியை ‘டார்கெட்’ செய்த விஜய்! த.வெ.க. முதல் மாநாட்டிற்கு ரெடியா?
விக்கிரவாண்டி : த.வெ.க மாநாடு நடத்த அனுமதிக்கோரி விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் கட்சி சார்பில் மனுகொடுக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் கொடி மற்றும் கட்சி பாடலை கடந்த ஆகஸ்ட் 22-ஆம் தேதி விஜய் அறிமுகம் செய்து வைத்ததை தொடர்ந்து தொண்டர்கள் அனைவரும் முதல் மாநாடு எங்கு எப்போது நடைபெறும் என்பதற்காக தான் காத்திருக்கிறார்கள். ஏனென்றால், கட்சியின் கொடி அறிமுக விழாவில் விஜய் குறைவான நேரம் மட்டுமே பேசினார்.
எனவே, பேச வேண்டிய பல விஷயங்களை கட்சியின் முதல் மாநாட்டில் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டுமின்றி, கட்சிக்கொடிக்கு பின்னால் வரலாறு ஒன்று இருப்பதாகவும், அதனை ‘விளக்கமாக நான் மாநாடு வரும்போது அதில் வைத்து பேசுகிறேன்’ எனவும் விஜய் கட்சிக்கொடி அறிமுகம் செய்யும் விழாவில் தெரிவித்திருந்தார்.
இந்த சூழலில், தவெக கட்சியின் முதல் மாநாட்டிற்கான வேலைகள் மும்மரமாக தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இன்று (புதன்கிழமை) தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டிற்கு அனுமதி கேட்டு விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்தில் கட்சி சார்பில் மனுகொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி வழங்கியபிறகு மாநாடு நடைபெறும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஏற்கனவே, வெளியான தகவலை உறுதிப்படுத்தும் விதமாக த.வெ.க கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் வைத்து தான் நடைபெற இருக்கிறது. எனவே, மாநாடு நடத்த அனுமதி அளித்து பாதுகாப்பு வழங்கவேண்டும் என கேட்டு, இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் விழுப்புரம் எஸ்.பி. அலுவலகத்திற்கு நேரில் சென்று அதற்கான மனுவை வழங்கினார்.
முன்னதாக, செப்டம்பர் 22-ஆம் தேதி நடத்த திட்டமிட்ட நிலையில், 23ஆம் தேதிக்கு அனுமதி கேட்டு மனு கொடுக்கப்பட்டுள்ளது. இந்த மனு மீதான பரிசீலனை மாவட்ட கண்காணிப்பாளர் மற்றும் மாவட்ட ஆட்சியர் பார்த்து பரிசீலனை செய்த பிறகு தான் அனுமதி வழங்கப்படுமா? அல்லது மறுக்கப்படுமா? என்பது தெரியவரும். அனுமதி கொடுக்கப்பட்டால் மாநாடு நடைபெறுவது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை விஜயே வெளியிடுவார் என்பது குறிப்பிடத்தக்கது.