புதிய கல்விக் கொள்கையை திணிக்கும் மத்திய அரசு.? ஒன்றாக குரல் கொடுக்கும் திமுக – அதிமுக.!
சென்னை : தமிழ்நாடு அரசின் பள்ளிகள் கட்டமைப்பு மேம்பாட்டுக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளதை கண்டித்து அதிமுக மற்றும் திமுக தலைவர்கள் தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கையை தமிழக அரசு இதுவரையில் ஏற்கவில்லை. தமிழ்நாட்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உட்பட பெரும்பாலான பள்ளிகளில் தமிழக அரசின் இருமொழி கல்விக்கொள்கை தான் பின்பற்றப்பட்டு வருகிறது. வழக்கமாக ஆண்டுதோறும் மாநில அரசுகளின் பள்ளிகள் கட்டமைப்பு மேம்பாட்டுக்காக நிதி வழங்கி வருகிறது.
மத்திய அரசின் செயல்பாடு :
ஆனால், மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையில் பிஎம் ஸ்ரீ பள்ளி எனும் திட்டம் உள்ளது. இந்த திட்டம் மூலம் பள்ளிகளின் கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. தேசிய கல்வி கொள்கையை டெல்லி, பஞ்சாப், மேற்கு வங்கம், தமிழகம், கேரளம் ஆகிய மாநிலங்கள் இதுவரை ஏற்கவில்லை. தமிழ்நாடு அரசு மட்டும் பிஎம் ஸ்ரீ திட்டத்தில் சேருவதற்கு மும்மொழி கொள்கை உட்பட சில விதிகளில் இருந்து விலக்கு கேட்டிருந்தது. ஆனால், மத்திய அரசு ஏற்க மறுத்துவிட்டது.
இப்படியான சூழ்நிலையில் தான், மாநிலங்களில் உள்ள பள்ளிக் கல்வி திட்டத்தின் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த கல்வியாண்டில் (2023-24) 3வது மற்றும் 4வது தவணை நிதியுதவி நிறுத்தப்பட்டது. அதேபோல, நடப்பு கல்வியாண்டிலும் பள்ளிக் கல்வித் திட்ட நிதியை மத்திய அரசு நிறுத்தியுள்ளது.
அதிமுக கண்டனம் :
மத்திய அரசின் இந்த செயலுக்கு கண்டனம் தெரிவித்து எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிடுகையில், ” ‘சமக்ரா சிக்ஷா அபியான்’ திட்டத்தின் கீழ் மத்திய அரசு 2024-2025ஆம் ஆண்டிற்கான முதல் தவணையாக ரூ. 573 கோடியை கடந்த ஜூன் மாதமே தமிழக அரசுக்கு விடுவித்திருக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு தனது பங்குத் தொகையை விடுவிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது. இதற்குக் காரணமாக புதிய கல்விக் கொள்கையை மாநில அரசு அமல்படுத்தவில்லை என்று மத்திய அரசு கூறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இந்திய நாட்டில் தங்களுடைய கொள்கைகளை கல்வித் துறையில் திணித்து மனித வளத்தைச் சீர்குலைக்கும் முயற்சியில் தற்போதைய மத்திய அரசு ஈடுபட்டுள்ளது கண்டிக்கத்தக்கதாகும். ” என கண்டனம் தெரிவித்துள்ளார்.
திமுக – பாஜக நாடகம் :
மேலும், மாநிலத்தில் ஆளும் திமுக அரசை கண்டித்தும் இபிஎஸ் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் , ” ‘ஒரே வார்த்தையில் அழைத்தோம் – மத்திய அமைச்சர் நேரில் வந்து கருணாநிதியின் நாணயத்தை வெளியிட்டார்’ என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் திமுக அரசின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அதே போன்று, ஒரே வார்த்தையில் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு கொண்டு வராததும், நீட்டை ஒழிக்காததும் ஏன்? தமிழகத்தின் பிரச்சனைகளைத் தீர்க்க மத்திய அரசை வலியுறுத்தாதது ஏன்? இரட்டை வேடம் போடும் திமுக-வும், தங்கள் காரியங்களை நிறைவேற்றிக்கொள்ள மாநில அரசுகளை மிரட்டும் பா.ஜ.க-வும் இணைந்து நடத்தும் நாடகங்களால் தமிழகத்தில் மாணவர்கள் மற்றும் கல்வியாளர்கள் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளது.” என பதிவிட்டுள்ளார்.
திமுக கண்டனம் :
மாநில பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டு நிதியை மத்திய அரசு நிறுத்தியது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறுகையில், ” இந்த கல்வியாண்டில் 573 கோடி ரூபாய் மட்டுமின்றி , கடந்த கல்வியாண்டில் 249 கோடி ரூபாயையும் மத்திய அரசு தரவில்லை. கேட்டால் புதிய கல்விக்கொள்கையை ஏற்க வேண்டும் என கூறுகிறார்கள். பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு சேர வேண்டும் என கூறுகிறார்கள்.
தேசிய கல்வி கொள்கை என்பது 2020இல் வந்தது. ஆனால் மாநில கல்வி உட்கட்டமைப்புக்கு மத்திய அரசு நிதி வழங்கும் நடைமுறை 2018 முதல் இருக்கிறது. அதில் ஏன் கை வைக்கிறீங்க.? பி.எம் ஸ்ரீ திட்டம் என்றால் என்ன என்று கேட்டோம். அதுவும் தேசிய கல்வி கொள்கையோடு ஒன்றிணைந்த கொள்கை தான் என கூறுகிறார்கள். அதிலும் மும்மொழி கொள்கை உள்ளது என்று கூறுகிறார்கள்.
தேன் கூட்டில் கை வைக்காதீர்கள்…
தமிழ்நாட்டை பொறுத்தவரையில் மும்மொழி கொள்கை என மொழியை திணிப்பது தேன் கூட்டில் கல்லெறிவது போன்றது. மத்திய அரசு கூறும் கல்வி வளர்ச்சி பணிகளில் எல்லாம் தமிழ்நாடு சிறப்பாக செயல்படுகிறது. அப்படியானால், தமிழ்நாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கி ஊக்குவிக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு நிதியை நிறுத்துவது எந்தவகையில் நியாயம்?” என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
புதிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் மாநில கல்வி மேம்பாட்டிற்கு நிதி என மறைமுகமாக புதிய கல்வி கொள்கையை திணிக்க முயற்சிக்கும் மத்திய அரசின் போக்கிற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் திமுகவை சேர்ந்த மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் என இருவருமே மத்திய அரசுக்கு தங்கள் கண்டனங்களை பதிவு செய்துள்ளனர்.