பாகிஸ்தானில் பயங்கரம்.! நடுரோட்டில் 23 பேர் சுட்டுக்கொலை.!
பாகிஸ்தான் : பலுசிஸ்தான் மாகாணத்தில் தீவிரவாதிகள், தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்களை வழிமறித்து அதில் குறிப்பிட்ட நபர்களை சுட்டுக்கொன்றனர். இதில் 23 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தான், பலுசிஸ்தான் மாகாணத்தில், சில தீவிரவாத அமைப்புகள் செயல்ப்பட்டு வருகின்றன. அவர்கள் பலுசிஸ்தானை தனி நாடாக பாகிஸ்தானில் இருந்து பிரிக்க வேண்டும் என்று தொடர் கோரிக்கை வைத்து பல்வேறு பயங்கரவாத செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறான பயங்கரவாத சம்பவம் இன்று பலுசிஸ்தான் மாகாணம் தேசிய நெடுஞ்சாலையில் நிகழ்ந்துள்ளது. முசகைல் மாவட்டத்தில் பலுசிஸ்தானையும் , பஞ்சாபையும் (பாகிஸ்தான்) இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் பேருந்துகள், வேன்கள் என பல்வேறு வாகனங்களை ஒரு பயங்கரவாத கும்பல் வழிமறித்துள்ளது.
அந்த கும்பல், பயணிகளிடம் பஞ்சாபை (பாகிஸ்தான்) சேர்த்தவர்களை அடையாளம் கண்டு துப்பாக்கியால் சுட்டுள்ளனர் . இந்த கொடூர தாக்குதலில் இதுவரை 23 பேர் உயிரிழந்துள்ளனர் என்றும், 5 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் PTI செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த பயங்கரவாத கும்பல் 10க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்து சேதப்படுத்தியுள்ளனர்.
“இந்த சம்பவத்தின் பின்னணியில் பிஎல்ஏ (பலோச் விடுதலை ராணுவம்) எனும் பயங்கரவாத அமைப்பு இருப்பதாக தெரிகிறது,” என AFP செய்தி நிறுவனத்திற்கு பலுசிஸ்தான் பகுதி காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.