தமிழகத்தில் ‘இந்த’ 25 இடங்களில் மட்டும் டோல்கேட் கட்டணம் உயர்வு.! ஏன் தெரியுமா.?
சென்னை : வரும் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் 25 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் 5 முதல் 7 சதவீதம் அளவுக்கு உயர்கிறது.
நாடு முழுக்க உள்ள தேசிய நெடுஞ்சாலைகள், மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலைத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகின்றன. நெடுஞ்சாலைகளின் பராமரிப்பு பணிகளுக்காக சுங்கக் கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. இந்த சுங்க கட்டணமானது ஒப்பந்த அடிப்படையில் தனியார் நிறுவனங்கள் மூலம் சுங்கச் சாவடிகளில் இருந்து வசூல் செய்யப்படுகிறது.
இருசக்கர வாகனங்கள் தவிர்த்து இலகுரக முதல் கனரக வாகனங்கள் வரை அனைத்து வாகனங்களுக்கும் அந்த வாகனங்களில் திறனுக்கேற்ப கட்டணம் வசூல் செய்ப்படுகிறது. இந்த சுங்கக் கட்டணம் வசூல் செய்ய தனியார் நிறுவனங்களிடம் 1992 மற்றும் 2008 ஆகிய ஆண்டுகளில் மத்திய அரசு உடன் ஒப்பந்தம் செய்தது.
இந்த ஒப்பந்தத்தின் படி, 1992ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட சுங்க சாவடிகளில் ஆண்டுதோறும் ஏப்ரல் 1ஆம் தேதி முதலும், 2008ஆம் ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட சுங்க சாவடிகளில் ஆண்டுதோறும் செப்டம்பர் 1ஆம் தேதி முதலும் கட்டணங்கள் உயர்த்தப்படுகின்றன.
இதில் கடந்த ஏப்ரல் மாதம் மக்களவை தேர்தல் நடைபெற்று வந்ததால், அந்த சமயம் சுங்க சாவடிகளில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை. அதனால், தேர்தல் முடிந்து, கடந்த ஜூன் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் 36 சுங்கச்சாவடிகளில் 5 சதவீதம் அளவுக்கு சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டது.
அடுத்ததாக, வழக்கமான முறைப்படி செப்டம்பர் 1 (ஆகஸ்ட் 31 நள்ளிரவு 12 மணி) முதல் தமிழகத்தில் 25 சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் உயர்த்தப்படுகிறது. சுமார் 5 முதல் 7 சதவீதம் வரையில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதன் மூலம் சுங்க கட்டணமானது ரூ.5 முதல் ரூ.150 வரையில் உயர்த்தப்பட உள்ளது.
தமிழகத்தில் விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை, சமயபுரம், மதுரை எலியார்பத்தி, ஓமலூர் , ஸ்ரீபெரும்புதூர், வாலாஜா உள்ளிட்ட பகுதிகளில் இந்த சுங்கக் கட்டண உயர்வு இருக்கும் என கூறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த 2023-24 நிதியாண்டில் மட்டும் ரூ.4,221 கோடி சுங்கக்கட்டணம் வசூல் செய்யப்பட்டு, சுங்கக் கட்டண வசூலில் மாநில அளவில் தமிழ்நாடு ஐந்தாவது இடத்தில் உள்ளது. முதலிடத்தில் உத்தரபிரதேச மாநிலம் உள்ளது, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.