இதனால தான் இவர “மிஸ்டர் ஐசிசி”னு சொல்றாங்க! கொடிகட்டி பறந்த ஷிகர் தவான் சாதனை!
சென்னை : இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவானை “மிஸ்டர் ஐசிசி” என ரசிகர்கள் கொண்டாடுவதற்கான காரணத்தைப் பற்றி பார்ப்போம்.
இந்திய அணியின் வரலாற்றில் தொடக்க பேட்ஸ்மானாக ஷேவாக், சச்சினைப் போலத் தொடக்க வீரருக்கென தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் ஷிகர் தவான். உள்ளூர் போட்டிகளை விடவும் ஐசிசி ஒருநாள் போட்டிகள், அணிகளுக்கு இடையேயான சுற்றுப் பயணத் தொடர்களிலும் தான் இவர் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட பேட்ஸ்மேன் ஆவார்.
ஐசிசி ஒரு நாள் தொடர் போட்டிகளில் தவானின் பேட்டிங் சராசரி 65-க்கும் மேல் வைத்துள்ளார். இந்த சராசரி இந்திய அளவில் மட்டுமில்லாமல் உலக அளவிலும் இதுவே அதிகமானதாகும். அது மட்டுமல்லாமல் தொடர்ச்சியாக 3 ஐசிசியின் ஒருநாள் போட்டித் தொடர்களில் இந்திய அணிக்காக அதிக ரன் குவித்து சாதனையும் படைத்திருந்தார்.
கடந்த 2013-ம் ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வெல்வதற்கு ஒரு பெரும் பங்காக அமைந்தது அந்த தொடரில் அவர் பேட்டிங்கில் ஆடிய ருத்ர தாண்டவம் தான். 2013-ம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தான் அவரை இந்த உலகம் பார்க்கத் தொடங்கியது. அதே தொடரில் 2 சதம் மற்றும் ஒரு அரை சதம் அடித்தார். இதனால், அந்தத் தொடரில் அதிக ரன் குவித்த வீரராகவும், அந்த தொடரின் நாயகனாகவும் திகழ்ந்தார்.
அதன் பிறகு 2015-ம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை தொடரிலும் ஷிகர் தவான் அதிக ரன் குவித்த இந்திய வீரராக இருந்தார். அந்தத் தொடரில் 8 போட்டிகளில் விளையாடிய அவர் 412 ரன்கள் குவித்து இருந்தார். அடுத்ததாக நடைபெற்ற 2017 சாம்பியன்ஸ் டிராபி தொடரில், 5 போட்டிகளில் விளையாடிய தவான் 338 ரன்கள் குவித்த்துடன் அதிக ரன் குவித்த பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனை படைத்தார்.
இதனாலேயே ரசிகர்கள் ஷிகர் தவானை “மிஸ்டர் ஐசிசி” என அழைக்கத் தொடங்கினார்கள். உள்ளூர் கிரிக்கெட் போட்டிகள், வேறு அணியுடனான சுற்றுப் பயணத் தொடர் என்றால் சற்று பொறுமையாகவே விளையாடும் ஷிகர் தவான், ஐசிசி தொடர் என்றால் அவரது விளையாட்டின் போக்கே முற்றிலும் வேறுபட்டதாகவே இருக்கும். அதன்பிறகு இந்திய அணிக்காகக் கடைசியாக 2022-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அவர் விளையாடினார்.
அதே போல 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் நடைபெற்ற இலங்கை அணிக்கு எதிரான டி20 தொடரில் தான் இவர் கடைசியாக விளையாடினார். அதன் பிறகு சுப்மன் கில் மற்றும் ஜெய்ஸ்வால் போன்ற இளம் வீரர்களின் எழுச்சியால் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு மறுக்கப்பட்டது. இருந்தாலும், வருடந்தோறும் நடைபெறும் ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வந்தார். இந்த நிலையில் இன்று காலை அவர் தனது ஓய்வை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.