திடீர்னு முருகன் மாநாடு நடத்தல.., நாங்க செய்தது ஏராளம்.! பட்டியலிட்ட முதலமைச்சர்.!

Muthamizh Murugan Maanadu - Tamilnadu CM MK Stalin

சென்னை : தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் பல்வேறு கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து “முத்தமிழ் முருகன் மாநாடு” துவக்க நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டார்.

இந்துக் கடவுள் முருகனின் 3ஆம் அறுபடை வீடு அமைந்துள்ள திண்டுக்கல் மாவட்டம் பழனியில் “முத்தமிழ் முருகன் மாநாடு” இன்றும் நாளையும் நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்வை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி வாயிலாக தொடங்கி வைத்தார். பழனியில் பழனியாண்டவர் கல்லூரி வளாகத்தில் மாநாட்டிற்கான பிரமாண்ட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

முதலமைச்சரின் காணொளி நிகழ்வில், சீர்காழி சிவசிதம்பரம் முருகன் பாடல் கோவிலில் ஒலிபரப்பட்டு காண்பிக்கப்பட்டது. இந்த பாடல் ஒலிக்க ஆரம்பித்தது முதல் முடியும் வரை முதலமைச்ச்சர் மு.க.ஸ்டாலின் எழுந்து நின்று மரியாதை செலுத்தினர். அதன் பிறகு உரையாற்ற தொடங்கினார் .

முதலமைச்சர் உரையில் தமிழக அறநிலையத்துறை சார்பில் மாநிலம் முழுவதும் உள்ள திருக்கோயில்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் திருப்பணிகள் குறித்து பல்வேறு தகவல்களை கூறினார். அவர் கூறுகையில், ” இந்து சமய அறநிலையத்துறை சார்பில் நடைபெறும் முருகன் மாநாடு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இந்து அறநிலையத்துறை சிறப்பாக செயல்படுகிறது.

கோயிலிலேயே குடியிருக்கும் அமைச்சராக சேகர்பாபு செயல்பட்டு வருகிறார். பலரும் பாராட்டும் விதமாக ஏராளாமான நிகழ்ச்சிகள் திட்டங்கள் செயல்படுத்த படுகிறது. அந்த வரிசையில் பழனியில் முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கலைஞர் ஆட்சி காலத்தில் குன்றக்குடி அடிகளார், கிருபானந்த வாரியார் ஆகியோர் பாராட்டினர். இப்போது நீங்கள் (மக்கள்) அனைவரும் பாராட்டுகிறீர்கள். திமுக ஆட்சி பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. அறநிலையத்துறை சார்பில் தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் குறித்து நான் கேட்டேன். அவைகளில் சில குறிப்பிட்ட திட்டங்களை இங்கே கூறுகிறேன்.

  • பழனி, திருத்தணி, திருச்செந்தூர், மருதமலை, குமாரவயலூர், சிறுவாபுரி, திண்டல் ஆகிய 7 முருகன் கோயில்களில் பெருந்திட்ட பணிகள் பெற்று வருகிறது.
  • கோயில் வளர்ச்சி பணிகளுக்காக 58.77 ஏக்கர் நிலங்கள், 58.54 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை கொடுத்து கையகப்படுத்தப்பட்டுள்ளன.
  • அறுபடை வீடுகளில் 789.85 கோடி ரூபாய் செலவில் 251 பணிகள் நடைபெற்று வருகிறது. அறுபடை வீடுகள் அல்லாத முருகன் கோயில்களில் 277.27 கோடி ரூபாய் செலவில் 588 பணிகள் நடைபெற்று வருகிறது. 69 முருகன் கோயில்களில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டுள்ளது.
  • பழனியில் உள்ள கல்வி  நிறுவனங்களில் பயிலும் 4000 மாணவ, மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்பட்டு வருகிறது. விரைவில் இலவச மதிய உணவும் வழங்கப்பட உள்ளது.
  • பழனியில் தைபூசம், பங்குனி உத்திரம் ஆகிய விழாக்களுக்கு பாதயாத்திரையாக வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது.
  • பழனி கோயிலில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற ஓவ்ய்வூதியதாரர்களுக்கு 3000 ரூபாய் ஓய்வூதியம் 4000 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
  • 2024ஆம் ஆண்டு அறுபடை வீடுகளுக்கு செல்லும் ஆன்மீக சுற்றுலாவுக்கு 1000 பக்தர்களை அழைத்து செல்வதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி இதுவரை 813 பேர் பயனடைந்துள்ளனர்.
  • எல்லா கோயில்களிலும் கட்டணமில்லா முடிகாணிக்கை செலுத்தும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. முடிகாணிக்கை ஊழியர்களுக்கு மாதம் ஊக்கத்தொகையாக 5000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது.
  • தவில், நாதஸ்வர கல்லூரி, அர்ச்சகர் , வேத ஆகம பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மாதம் ஊக்க தொகை 3000 ரூபாயிலிருந்து 4000 ரூபாயாக உயர்த்தி கடந்த 24.11.2023 முதல் வழங்கப்பட்டு வருகிறது.
  • பழனி கோயிலில் தினக்கூலி, தொகுப்பூதியம் அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு மேலாக வேலை பார்த்து வந்த 13 பணியாளர்கள் நிரந்தரமாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். திருக்கோயிலில் பணிபுரிந்து பணிக்காலத்தில் உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கு அவர்களின் திறமைக்கு ஏற்ப பணிகள் வழங்கப்பட்டுள்ளது.
  • திருக்கோயில்களில் பணியாற்றும் 1298 பணியாளர்கள் நிரந்தர பணியாளர்களாக பணியமர்த்தப்பட்டுள்ளனர். 111 பேர் கருணை அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

முத்தமிழ் முருகன் மாநாடு திடீரென நடத்தப்படவில்லை. இத்தனை பணிகளை செய்துகொண்டு தான் மாநாடு நடத்துகிறோம். ஒவ்வொரு நபருக்கும் ஒவ்வொரு நம்பிக்கை இருக்கும். அதற்கு திமுக தடையாக இருந்ததில்லை. திராவிட மாடல் எல்லோருக்கும் எல்லாம் என்ற கொள்கையை கொன்டு செயல்பட்டு வருகிறது . அறநிலையத்துறை சார்பாக பல்வேறு திட்டங்கள் நிறைவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

  • கடந்த 3 ஆண்டுகளில், 1355 கோயில்களில் குடமுழுக்கு விழா நடைபெற்றுள்ளது. 3,776 கோடி ரூபாய் செலவீட்டில் 8,436 கோயில் பணிகள் நடைபெற்றுளளன.
  • 50 கோடி ரூபாய் செலவில் கிராமப்புற ஆதிதிராவிடர் கோயில்களில் திருப்பணிகள் நடைபெற்றுள்ளன.
  • 62.76 கோடி ரூபாய் செலவில் 27 கோயில்களில் ராஜகோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • இதுவரை 6,140 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன.
  • 756 கோயில்களில் நாள் முழுவதும் அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. 82,000 பேர் தினமும் சாப்பிடுகிறார்கள்.
  • கோயில் சொத்துக்கள் மீட்கப்பட்டு வருகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் 1,59,507 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் அளவீடு செய்து எல்லை கற்கள் வைக்கப்பட்டுள்ளன.  4,189 ஏக்கர் நிலங்களுக்கு கோயில் பெயரில் பட்டா போடப்பட்டுள்ளன.

இப்போது நான் கூறியது எல்லாம் அறநிலையத்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்களில் ஒரு பகுதி தான். முழு திட்டங்களும் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளன. இந்த திருப்பணி திட்டங்களுக்கு மகுடம் சேர்க்கும் விதமாக முத்தமிழ் முருகன் மாநாடு நடைபெறுகிறது. இந்த நாள் தமிழக ஆன்மீக வரலாற்றில் மிக முக்கியமான நாள்.

ஆலய வழிபாடு தமிழில் நடைபெற வேண்டும். திருக்கோயில் கருவறைக்குள் மனிதர்களுக்குள் பாகுபாடில்லா சமநிலை நிலவ வேண்டும்.

அன்பால் உயிர்கள் ஒன்றாகும்.

அறத்தால் உலகம் நன்றாகும்” என “முத்தமிழ் முருகன் மாநாடு” நிகழ்வில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது உரையில் குறிப்பிட்டு பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்