கொல்கத்தா : சட்டவிரோதமாக உடல்கள் கடத்தல்.? விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்….
கொல்கத்தா : பயிற்சிப் பெண் மருத்துவர் படுகொலை வழக்கு மற்றும் ஆர்.ஜி கர் கல்லூரி முன்னாள் முதல்வர் தொடர்பான வழக்கு ஆகியவற்றை சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஆகஸ்ட் 9ஆம் தேதி கொல்கத்தா ஆர்.ஜி கர் மருத்துவமனை வளாகத்திற்குள் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை முதலில் கொல்கத்தா காவல்துறையினர் விசாரணை செய்து வந்த நிலையில், இந்த வழக்கை சிபிஐ விசாரணை தேவை என கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
உயர்நீதிமன்ற உத்தரவுக்கு பின்னர் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ கையிலெடுத்தது. சிபிஐ விசாரணையில் ஆர்.ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் இன்று வரை 7 நாட்கள் விசாரணைக்கு ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார். இன்று சிறப்பு நீதிமன்ற உத்தரவின் பெயரில் உண்மை கண்டறியும் சோதனையும் சந்தீப் கோஷ் மீது நடத்தப்பட்டது.
இப்படியான சூழலில், ஆர்.ஜி கர் மருத்துவமனையின் முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது, மருத்துவமனையில் உரிமை கோராமல் இருக்கும் உடல்கள் , உயிரி கழிவுகளை சட்டவிரோதமாக வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தியதாக அம்மருத்துவ கல்லூரி முன்னாள் துணை கண்காணிப்பாளர் அக்தர் அலி என்பவர் காவலத்துறை சிறப்பு விசாரணை குழுவிடம் முன்னரே கூறி இருந்தார்.
இதனை விசாரித்த கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி ராஜர்ஷி பரத்வாஜ், ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் நடந்த பாலியல் படுகொலை வழக்கு உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் விசாரிக்கும் பொறுப்பை சிபிஐக்கு கொல்கத்தா உயர்நீதிமன்றம் வழங்குகிறது. என்றும், முன்னாள் துணை கண்காணிப்பாளர் அக்தர் அலி கூறிய குற்றசாட்டை சிபிஐ முழுதாக விசாரிக்கும் என்றும், விசாரணை ஆவணங்களை நாளை காலை 10 மணிக்குள் சிபிஐயிடம் சிறப்பு விசாரணை குழு ஒப்படைக்குமாறு உத்தரவிட்ட்டார்.
மேலும், செப்டம்பர் 17ஆம் தேதிக்குள் இந்த வழக்குகள் குறித்த விசாரணை அறிக்கையை சிபிஐ, கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், இந்த விசாரணையில் உடன்பட்டுள்ள அக்தர் அலி பாதுகாப்பு கோரினால் நீதிமன்றத்தை நாடலாம் என்று குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்தார் நீதிபதி ராஜர்ஷி பரத்வாஜ்.
ஆர்.ஜி.கார் மருத்துவக் கல்லூரியின் முன்னாள் துணை கண்காணிப்பாளர் அக்தர் அலி, முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் மீது ஓர் பரபரப்பு குற்றசாட்டை முன்வைத்துள்ளார். சந்தீப் கோஷ், உரிமை கோரப்படாத உடல்களை சட்டவிரோதமாக வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளுக்கு கடத்தியுள்ளார் என்று காவல்துறை சிறப்பு விசாரணைக் குழுவிடம் குற்றம்சாட்டி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.