கிருஷ்ணகிரி பாலியல் வழக்கு : சந்தேகத்தை கிளப்பிய இபிஎஸ்.!

Sivaraman - ADMK Chief secretary Edappadi Palanisamy

சென்னை : கிருஷ்ணகிரி பாலியல் வழக்கில் சிவராமன் மற்றும் அவரது தந்தை ஆகியோர் உயிரிழந்த விவகாரம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் அருகே தனியார் பள்ளியில் நடைபெற்ற போலி என்சிசி முகாமில் 12 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சிவராமன், பள்ளி முதல்வர், பள்ளி தலைமை ஆசிரியர் ,  பயிற்சியாளர்கள், ஆசிரியர்கள் என மொத்தம் 11 பேர் மீது போக்ஸோ வழக்குப் பதியப்பட்டு கைதாகினர்.

இதில் சிவராமன் காவல்துறையால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் எலி மருந்து சாப்பிட்டுள்ளார். இதனால், அவரை கிருஷ்ணகிரி மருத்துவமனையில் இருந்து சேலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி சிவராமன் இன்று காலை உயிரிழந்தார். அதற்கு முன்னதாக அவரது தந்தை அசோக்குமார்  குடிபோதையில் சாலையில் தவறி விழுந்து உயிரிழந்தார் என என்ற தகவலும் வெளியானது.

பாலியல் குற்றத்தில் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்ட சிவராமன் உயிரிழப்பு மற்றும் அவரது தந்தை உயிரிழப்பு ஆகியவை அரசியல் வட்டாரத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. முன்னதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிடுகையில், “சிவராமன் மற்றும் அவரது தந்தை உயிரிழப்புகள் பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. பாலியல் குற்றதிற்கு பின்னால் பெரிய புள்ளிகள் இருக்குமோ என்ற சந்தேகம் எழுகிறது. சிவராமன் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூட சந்தேகம் எழுகிறது.” என பல்வேறு சந்தேகங்களை குறிப்பிட்டிருந்தார்.

அதே போல, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் சிவராமன் மற்றும் அவரது தந்தை உயிரிழப்புகள் குறித்து பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளார். அவர் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகையில், “கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே, தனியார் பள்ளியில் போலி NCC முகாம் நடத்தி, பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சிவராமன், காவல்த்துறை சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணைக்கு முன்பாகவே எலி மருந்து சாப்பிட்டு, காவல் துறையால் சேலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை மரணமடைந்ததாக ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன.

மேலும், அவரது தந்தை அசோக்குமார் என்பவரும் நேற்று இரவு மதுபோதையில் இருந்தபோது ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்துவிட்டார் என்று செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த இரண்டு தொடர் மரணங்களுமே, சந்தேகத்திற்கிடமானவையாக இருக்கின்றன. சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணையில், சிவராமன் இந்த பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கியப் புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், அவர் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொதுமக்களால் கேள்வி எழுப்பப்படுகிறது.

போலி NCC பயிற்சி முகாம்கள் எத்தனை ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது? இதுவரை எத்தனை முறை நடைபெற்றுள்ளது? கிருஷ்ணகிரி தவிர வேறு மாட்டங்களில் இதுபோல் போலி NCC முகாம்கள் நடத்தப்பட்டுள்ளனவா? சிவராமன் தவிர வேறு யாரேனும் இதில் சம்பந்தப்பட்டுள்ளனரா? போலி NCC முகாம்கள் நடத்தி அவர்களுக்கு NCC சார்பாக சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளனவா? போலி NCC பயிற்சியாளர்களை மாணவிகளுக்கு பயிற்சியளிக்க அனுமதித்த பள்ளி நிர்வாகத்தினர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்? போன்ற பல சந்தேகங்களுக்கு விடை அளிக்கக்கூடிய சிவராமன், தற்கொலை செய்து கொண்டது பொதுமக்களிடையே பெரும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது. இந்த வழக்கில் தொடர்புடைய உண்மைக் குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதோ என்ற சந்தேகம் மக்களிடையே எழுகிறது.

ஏற்கெனவே, தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் (ஆம்ஸ்ட்ராங்) படுகொலை வழக்கில் சரணடைந்த விசாரணைக் குற்றவாளி ஒருவர் என்கவுன்ட்டர் செய்யப்பட்ட போது எழுந்த கேள்விகளுக்கும் திமுக அரசிடமிருந்து முழுமையான பதில் வரவில்லை. இந்நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே போலி NCC முகாம் நடத்தி பள்ளி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தந்தை, மகன் இருவரின் மரணங்கள் காவல் துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகமும் எழுகிறது.

பள்ளி மாணவிகள் பாலியல் வன்முறை தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள சிறப்புப் புலனாய்வுக் குழு, இது தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தி, இந்த கேள்விகளுக்கான உண்மையான விடைகளை வெளிக்கொண்டுவர வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை வலியுறுத்துகிறேன்.” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்