“யானை எங்களுடையது..” த.வெ.க-வுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பகுஜன் சமாஜ்வாடி.?
சென்னை : த.வெ.க கட்சிக் கொடியில் இடம்பெற்றுள்ள யானை சின்னம் தங்களுடைய தேர்தல் சின்னம் எனவே அதனை பயன்படுத்த கூடாது என பகுஜன் சமாஜ்வாடி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
திரைப்பட நடிகரும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவருமான விஜய், இன்று தனது கட்சிக் கொடி, கட்சிப் பாடல் மற்றும் உறுதிமொழியை வெளியிட்டார். திரைத்துறையில் செல்வாக்குமிக்க உச்ச நட்சத்திரமாக இருக்கும் சமயத்திலேயே தேர்தல் அரசியலில் களமிறங்கியுள்ள விஜய்க்கு பல்வேறு அரசியல் தலைவர்களும், திரைப் பிரபலங்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
சிவப்பு – மஞ்சள் – சிவப்பு என நிற கட்சிக் கொடியின் மையத்தில் வாகை மலர், அதனைச் சுற்றி நட்சத்திரங்கள், கட்சிக்கொடி நடுவே இரு புறமும் போர் யானைகள் என த.வெ.க கொடி அறிமுகம் செய்யப்பட்டது. த.வெ.க பாட்டிலும் போர் யானைகள் கவனஈர்ப்புடன் காட்சிப்படுத்தப்பட்டன.
இப்படி இருக்கும் சூழலில் அதே போர் யானைகளால் புதிய பிரச்சனை த.வெ.க கட்சிக்கு ஏற்பட்டுள்ளது. யானை சின்னம் என்பது தேசிய கட்சிகளில் ஒன்றான பகுஜன் சமாஜ்வாடி கட்சியின் தேர்தல் சின்னமாகும். இதனை குறிப்பிட்டு தமிழக பகுஜன் சமாஜ்வாடி கட்சி தலைவர்கள், தங்கள் கட்சி சின்னமான யானை சின்னத்தை த.வெ.க கொடியிலிருந்து நீக்க வேண்டும் என்றும், அப்படி நீக்காவிட்டால் தேர்தல் ஆணையத்தை முறையிட உள்ளதாகவும்,
தேர்தல் விதிகளின்படி, ஒரு கட்சி பயன்படுத்தும் சின்னம், படங்களை மாற்று கட்சி பயன்படுத்தக் கூடாது எனவும் பகுஜன் சமாஜ்வாடி கட்சியினர் கூறி வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க கட்சி அறிமுகம் செய்யப்பட்ட முதல் நாளிலேயே தேசிய கட்சி தரப்பில் இருந்து கருத்து வேறுபாடுகளை அக்கட்சி பெற்று வருகிறது.