சாதி, மதம், பாலினம்.. ‘அனைவருக்கும் சம வாய்ப்பு’: விஜய்யுடன் உறுதிமொழி ஏற்ற தொண்டர்கள்..!!

TVK Vijay

சென்னை : மக்களாட்சி, மதச் சார்வின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என்று விஜய் உறுதிமொழி ஏற்றார்.

சென்னை பனையூரில் இன்று நடைபெற்ற தவெக கட்சிக் கொடியேற்ற விழாவில், தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியை அக்கட்சியின் தலைவர் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். தமிழ்த்தாய் வாழ்த்துடன், விஜய் கட்சிக்கொடி அறிமுக விழா தொடங்கியது.

தவெக கட்சியின் கொடியில், மேலும் கீழும் சிகப்பு நிறத்திலும், நடுவில் மஞ்சள் நிறத்திலும் உள்ள அந்தக் கொடியில் வாகைப் பூவும், 2 போர் யானைகளும் இடம்பெற்றிருக்கின்றன. வாகைப் பூ வெற்றியையும், போர் யானைகள் வீரத்தையும் குறிக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்து வைத்த நடிகர் விஜய், கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார். அதற்கு முன்னதாக, தனது நெஞ்சில் கை வைத்து, கட்சி தொண்டர்கள் மத்தியில் உறுதி மொழி ஏற்றார் விஜய்.

விஜய்யின் உறுதிமொழி

  • நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன்.
  • நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன்.
  • இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை.
  • சகோதரத்துவம், மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்.
  • மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன்.
  • சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு.
  • சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்.

இவ்வாறு தமிழக வெற்றிக்கழகம் சார்பில், உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்