தமிழகத்தில் குரங்கம்மை பாதிப்பு இருக்கிறதா.? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்.!
சென்னை : தமிழகத்தில் குரங்கம்மை நோய் தொற்று பாதிப்பு யாருக்கும் ஏற்படவில்லை என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
ஆப்பிரிக்க நாடுகளில் அதிகமாக பரவி குரங்கம்மை தொற்று நோயின் பாதிப்பையொட்டி உலக சுகாதார மையம் (WHO) கடந்த 14-ம் தேதி அவசர நிலையை அறிவித்திருந்தது. கடந்த 2022 ஆம் ஆண்டு முதல் ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பரவ தொடங்கிய இந்த நோயானது இப்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் படிப்படியாகப் பரவ ஆரம்பித்திருக்கிறது. இதுவரை, குரங்கம்மை தொற்று நோயால் 15,000 மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 500 பேர் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து, பல நாடுகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் பாதிப்பு இல்லை என்றாலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், (ஆக 21) அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் சுகாதார செயலாளர் சுப்ரியா சாஹூ ஆகியோர் சென்னை விமான நிலையத்தில் குரங்கம்மை நோய் குறித்த கண்காணிப்பு பணியை மேற்கொண்டார்கள்.
கண்காணிப்பு முடிந்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், குரங்கம்மை நோய் தடுக்கும் பணிகளை மத்திய அரசு நன்றாக கையாண்டு வருவதாக பாராட்டுகளை தெரிவித்தார். இதுகுறித்து அவர் பேசியதாவது ” உலகம் முழுவதும் வேகமாக பரவிக்கொண்டு இருக்கும் குரங்கம்மை நோயை கட்டுப்படுத்த பல முன்னெச்செரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதனை மத்திய அரசு சிறப்பாக கையாண்டு வருகிறது” என பேசினார்.
தொடர்ந்து பேசிய அவர் தமிழகத்தில் இந்த நோய்க்கான பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இது பற்றி பேசிய அவர் ” பாகிஸ்தானில் ஒருவருக்கு குரங்கம்மை நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, இதன் காரணமாக தமிழக்தில் நாங்கள் தீவிரமாக கண்காணிப்பு நடத்தி வருகிறோம். இதுவரை தமிழகத்தில் யாருக்கும் குரங்கம்மை பாதிப்பு ஏற்படவில்லை.
வெளிநாடுகளில் இருந்து கப்பல்கள், மற்றும் விமானம் மூலம் வருபவர்களை கண்காணித்து கொண்டு இருக்கிறோம். சென்னையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் குரங்கம்மை நோய்காக 10 படுக்கைகள் கொண்ட வார்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. சென்னை மட்டுமின்றி, திருச்சி, மதுரை ஆகிய மாவட்டங்களிலும் அரசு மருத்துவக்கல்லுரிகளில் 10 படுக்கைகள் கொண்ட வார்டு அமைக்கப்பட்டுள்ளது ” எனவும் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.