ஐசிசியின் புதிய தலைவராகும் ஜெய்ஷா? இது தான் ‘லக்’னு சொல்லுவாங்க போல!

BCCI Secretary Jayshah

சென்னை : இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைமைச் செயலாளரான ஜெய்ஷா அடுத்த ஐசிசியின் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார் என ஒரு தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

பிசிசிஐ செயலாளர் ..!

கடந்த 2019ம் ஆண்டில் குஜராத் கிரிக்கெட் சங்கத்தின் துணை செயலாளராக இருந்த ஜெய்ஷா அந்த பதவியிலிருந்து விலகினார். அதன் பின் அதே ஆண்டில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் (BCCI) தலைமைச் செயலாளராகப் பொறுப்பேற்றார். இவர் பிசிசிஐ-யின் செயலாளராகப் பதவியேற்றது முதல் இந்திய கிரிக்கெட் அணிக்காக இவர் எடுக்கும் சில அடுத்த கட்ட நடவடிக்கைகளைப் பலரும் வரவேற்றனர்.

அதிலும் குறிப்பாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர், இந்தியாவில் கிரிக்கெட் வளர்ச்சிக்காக பிசிசிஐ மேற்கொண்ட நடவடிக்கைகளைப் பாராட்டி இருந்தார். கடந்த 5 ஆண்டுகளாக பிசிசிஐ செயலாளராகச் செயல்பட்டு வரும் ஜெய்ஷா இந்த ஐசிசி தலைவர் தேர்தலுக்காகப் போட்டியிட்டால் தற்போது செயலாற்றி வரும் இந்த பிசிசிஐ செயலாளர் பதவியை ராஜினாமா செய்யும் சூழல் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசியின் தலைவர் பொறுப்பு ..!

கடந்த 4 ஆண்டுகளாக நியூசிலாந்து நாட்டைச் சேர்ந்த கிரெக் பார்க்லே ஐசிசி தலைவராகச் செயலாற்றி வந்தார். இந்நிலையில், இந்த ஆண்டின் இறுதியில் அவரது பதவிக் காலம் முடிவடைகிறது. மேலும்,  கிரெக் பார்கலே தன்னை 3-வது முறையாக இந்த தலைவர் பதவிக்கு நியமனம் செய்ய வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.  இதனால், அவரின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து ஐசிசி தலைவர் பதவிக்கான தேர்தல் என்பது நடைபெற இருக்கிறது.

இதற்காக வரும் ஆகஸ்ட் 27 ஆம் தேதிக்குள் இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளனர். ஐசிசி தலைவர் பொறுப்பைப் பொறுத்தவரை 2 ஆண்டுகள் என்ற அடிப்படையில் தொடர்ந்தது 3 முறை தொடர்ச்சியாகப் பதவி வகித்துக் கொள்ள முடியும். கிரெக் பார்கலே இந்த விதிப்படி தொடர்ந்து 2 முறை அடிப்படையில் 4 வருடங்கள் ஐசிசி தலைவராகப் பதவி வகித்து விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிசி தலைவராகும் ஜெய்ஷா ?

தற்போது, இந்த சூழலில் வரும் நவம்பர் மாதம் ஐசிசி தலைவருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் பிசிசிஐ செயலாளரான ஜெய்ஷா போட்டியிட இருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஐசிசி தலைவர் போட்டியில் போட்டியிட விண்ணப்பித்தால் அவர் தான் அடுத்த ஐசிசி தலைவராகும் வாய்ப்பு அதிகமாக உள்ளது எனக் கூறப்படுகிறது.

ஜெய்ஷாவைப் பொறுத்தவரையில், பிசிசிஐ செயலாளராக மட்டுமில்லாமல் ஐசிசியின் நிதி மற்றும் வணிக விவகாரங்கள் துணைக் குழுவின் தலைவராகவும் உள்ளார். இதனால், அவருக்கு ஐசிசியில் பணியாற்ற அனுபவமும் அதே நேரம் அதிக தொடர்புகள் உள்ளன. இதனால், அவர் ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்பதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது எனவும் கூறுகிறார்கள்.

ஐசிசியின் விதிகளின் படி ஒருவேளை ஜெய்ஷா ஐசிசி தலைவரானால் அடுத்த 4 ஆண்டுகள் அதாவது 2028 வரையில் அவர் ஐசிசி தலைவராகப் பொறுப்பில் இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தலைவர் தேர்தலில் 16 வாக்குகள் இருக்கிறது, அதனால் வெற்றி பெறுவதற்கு 9 வாக்குகள் தேவைப்படும்.

அதாவது 51% சதவீத வாக்குகள் தேவைப்படும். இதில் ஜெய்ஷாவிற்கு 16 வாக்குகளும் (100%) மொத்தமாகக் கிடைக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஐசிசி தலைவராக ஜெய்ஷா தேர்ந்தெடுக்கப்பட்டால் இளம் வயதில் (35 வயது) ஐசிசி தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் என்ற பெருமையை அவர் அடைவார் என்பது குறிப்பிடத்தக்கது. இது ஜெய்ஷாவிற்கு அடித்த ஒரு வித ‘லக்’காகவும் ரசிகர்களால் கருதப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்