மகாராஜா படத்தை நிகாரித்த சாந்தனு! காரணம் பாக்கியராஜா?
சென்னை : மகாராஜா படத்தின் கதையை நிகாரித்ததற்கும் என் தந்தைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என நடிகர் சாந்தனு விளக்கம் கொடுத்துள்ளார்.
விஜய் சேதுபதி நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டான ‘மகாராஜா’ படத்தில் சாந்தனு முதலில் நடிக்கவிருந்துள்ளார். படத்தின் இயக்குனர் நித்திலன் முதல் படமான குரங்கு பொம்மை படத்தை இயக்குவதற்கு முன்பே மகாராஜா படத்துடைய மையக்கருவை சாந்தனுவிடம் கூறினாராம்.
நித்திலன் சொன்ன அந்த கதை சாந்தனுக்கு ரொம்பவே பிடித்த காரணத்தால் பல தயாரிப்பாளர்களிடம் பேசி இயக்குநரைக் கதை சொல்லவும் சொன்னாராம். ஆனால், சாந்தனுவுக்கு கதை பிடித்தால் கூட தயாரிப்பாளர்கள் படத்தைத் தயாரிக்க முன்வரவில்லையாம். பிறகு இந்த படத்தை எடுக்க நாள் ரொம்பவே தள்ளிச் சென்று கொண்டிருந்த காரணத்தால் நித்திலன் ‘குரங்கு பொம்மை’ படத்தினை இயக்கினாராம்.
அந்த படத்தை முடித்த பிறகு ‘மகாராஜா’ படத்தின் மையக்கருவை மட்டும் எடுத்துக் கொண்டு கதையை வேறுமாதிரி எழுதி விஜய் சேதுபதியை வைத்து இயக்கினாராம். இந்த தகவலை இயக்குனர் நித்திலன் யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டி ஒன்றில் பேசும்போது தெரிவித்து இருந்தார். இவர் பேசியதைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் சாந்தனு அவருடைய தந்தை சொல்லித் தான் மகாராஜா படத்தை நிகாரித்துள்ளார் எனவும் விமர்சிக்க ஆரம்பித்தனர்.
இதனையடுத்து, விமர்சனங்களுக்குத் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். ” இந்த கதையை நிகாரித்ததில் என் அப்பாவுக்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, நித்திலன் என்னை அணுகியது என் அப்பாவுக்குக் கூட தெரியாது. அந்த நேரத்தில், தயாரிப்பாளர்கள் ரிஸ்க் எடுக்கத் தயாராக இல்லை, ஆனால் இன்று, படத்தின் கதை தான் பெரிய விஷயமாக மாறிவிட்டது. நான் எப்போதும் வேலை செய்யச் சிறந்த கதைகளைத் தேடுகிறேன். “காலம் எல்லாவற்றிற்கும் பதிலளிக்கும்” எனவும் சற்று கோபத்துடன் சாந்தனு கூறியுள்ளார்.
மகாராஜா படம் மட்டுமின்றி ஆரம்பக் காலத்திலிருந்தே ஒரு சில மெகா ஹிட் படங்களையும் சாந்தனு நடிக்கத் தவறவிட்டுள்ளார். குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் சுப்பிரமணியபுரம், களவாணி ஆகிய படங்களில் முதலில் நடிக்கவிருந்தது அவர் தான் என்பது குறிப்பிடத்தக்கது.