வீட்டில் கண் திருஷ்டி இருப்பதை கண்டுபிடிப்பது எப்படி?..
சென்னை :வீட்டில் கண் திருஷ்டி இருப்பதை கண்டறிவது எப்படி என்றும், திருஷ்டி கழிக்கும் முறைகள் பற்றியும் இப்பதிவில் அறியலாம்.
கண் திருஷ்டியை அறிவது எப்படி?
கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எப்போதுமே உடல் அசதி இருக்கும். வீட்டில் அடிக்கடி ஏதாவது பிரச்சனைகள் ,காரிய தடங்கல்கள் ,தொழில் நஷ்டங்கள், முன்னேற்றமின்மை, குடும்பத்தில் அடிக்கடி சண்டை சச்சரவு, சுப நிகழ்ச்சியில் தடை ஏற்படுவது, வீட்டில் யாராவது ஒருவருக்கு மாற்றி மாற்றி உடல்நிலை சரியில்லாமல் போவது,விபத்து ஏற்படுவது ,காலில் அடிக்கடி அடிபடுவது ,குடும்பத்தில் பிரிவுகள் ஏற்படுவது,உடம்பில் கொப்புளங்கள் வருவது போன்றவை காணப்படும்.
திருஷ்டி கழிக்கும் முறைகள்;
திருஷ்டி கழிக்க மாலை நேரம் உகந்ததாக சாஸ்திரத்தில் கூறப்படுகிறது .திருஷ்டி கழிப்பவர்கள் திருஷ்டி சுற்றி கொள்பவரை விட மூத்தவராக இருக்க வேண்டும். செவ்வாய் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் திருஷ்டி கழிக்க உகந்த நாட்களாக கூறப்படுகிறது. மேலும் கிழக்கு திசை நோக்கி திருஷ்டி கழிப்பது தான் சரியான முறை எனவும் சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது.
கண் திருஷ்டி பரிகாரங்கள்;
வீட்டில் அலங்கார செடிகளை வளர்ப்பதை காட்டிலும் முள் செடிகளான ரோஜா செடி மற்றும் கற்றாழை செடிகளை வளர்ப்பது கண் திருஷ்டியை நீக்கும்.
வீட்டின் நுழைவாயிலில் ஒரு பாத்திரத்தில் நீர் நிரப்பி அதில் மலர்களை போட்டு வைக்க வேண்டும் .மலர்களுக்கு கண் திருஷ்டியை கிரகித்துக் கொள்ளும் தன்மை உள்ளது.
வீட்டிற்கு வரும் நபர்களின் பார்வையும் சிந்தனையும் திசை திருப்ப ஏதேனும் ஒரு பொருளை நிலை வாசலில் தொங்கவிடுவது சிறப்பாகும்.
வாழை மரம் வைத்தால் வீட்டில் உள்ள அனைத்து திருஷ்டிகளையும் கலைக்கக்கூடிய தன்மை இதற்கு உண்டு.
வீடு மற்றும் அலுவலகங்களில் மீன் தொட்டி வைத்துக் கொள்வது கண் திருஷ்டியை விலக்கும் .
கற்றாழையை வீட்டு வாசலில் வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று கட்டி தொங்க விட வேண்டும். இதற்கும் கண் திருஷ்டியை நீக்கும் தன்மை உள்ளது.
திருஷ்டி கழிப்பது எப்படி ?
கடுகு ,உப்பு மற்றும் மூன்று மிளகாயை கண் திருஷ்டியால் பாதிக்கப்பட்டவரை கிழக்கு நோக்கி இருக்குமாறு வைத்து அவர்களை மூன்று முறை சுற்றி பிறகு எரிந்து கொண்டிருக்கும் அடுப்பில் போட்டு விடவும்.
குளிக்கும் நீரில் கல் உப்பு சேர்த்து குளித்தால் கண் திருஷ்டியால் ஏற்பட்ட அசதி மற்றும் அலர்ஜி நீங்கும். இதை வாரத்திற்கு ஒருமுறை செய்து வரலாம்.
நம் வீட்டிற்கு வருபவர்களுக்கு முதலில் குடிப்பதற்கு தண்ணீர் கொடுக்க வேண்டும். இது அவர்களின் மனநிலை மற்றும் எண்ணங்களை மாற்றி வீட்டில் கண் திருஷ்டி ஏற்படாமல் பாதுகாக்கும்.
காரிய தடை இருந்தால் படிகாரத்தை[நாட்டுமருந்து கடையில் கிடைக்கும் ]வாங்கி திருஷ்டியால் பாதிக்கப்பட்டவரை வலம் இருந்து இடமாக மூன்று முறையும், இடமிருந்து வலமாக மூன்று முறையும், பிறகு தலையிலிருந்து பாதம் வரை இறக்கி திருஷ்டி கழிக்க வேண்டும். இதை மூச்சந்தையில் போட்டு விடவும். அல்லது நீரில் போட்டு பிறகு அந்த நீரை பிறர் கால் படாமல் இருக்கும் இடத்தில் ஊற்றி விடவும்.
குழந்தைகளுக்கு திருஷ்டி ஏற்பட்டிருந்தால் அழுது கொண்டே இருப்பார்கள் சாப்பிட மாட்டார்கள். இந்த சமயத்தில் ஒரு கைப்பிடி உப்பை எடுத்து அந்தக் குழந்தையை தாய் மீது அமர்த்தி மூன்று முறை அவர்களின் தலையை சுற்றி நெருப்பில் போட்டு விடவும்.
மேலும் கண் திருஷ்டி படாமல் இருக்க கால் கட்டை விரலில் கருப்பு மை வைத்துக் கொள்வது மூலம் கண் திருஷ்டியில் இருந்து பாதுகாத்துக் கொள்ளலாம்.
ஆகவே கண்திருஷ்டியிலிருந்து விடுபடவும் உங்களை பாதுகாத்து கொள்வதும் மிக அவசியம். ஏனென்றால் உங்கள் ஆரோக்கியத்திற்கும் முன்னேற்றத்திற்கும் தடையாக இருப்பது கண்திருஷ்டியும் ஒன்று என்பதை நினைவில் கொண்டு அதை சரிசெய்து கொள்ளுங்கள் .