போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட இஸ்ரேல்? அமெரிக்கா அறிவிப்பு.!
அமெரிக்கா : இஸ்ரேல்-ஹமாஸ் அமைப்புகளுக்கு இடையேயான போர் நடைபெற்று வரும் நிலையில் அந்த போரை இஸ்ரேல் நிறுத்த உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் – ஹமாஸ் போர் ..!
இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் இந்த போரால் பெரும் பதற்றமான சூழல் என்பது நிலவி வருகிறது. இந்த போரில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் உயிரிழந்தனர்.
இந்த தாக்குதலுக்கு எதிர்த் தாக்குதலாக ஹமாஸ் அமைப்பினரைக் குறிவைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலில் மொத்தமாக 40,000 மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர் மேலும் 90,000-க்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
போர் ஒப்பந்தம் ..!
இப்படி மாறி மாறி ஓராண்டாக நடைபெற்று வரும் இந்த போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்குச் சமீபத்தில் அமெரிக்கா தரப்பில் ஒப்பந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால், இந்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் பெரிதாகப் பொருட்படுத்தவில்லை. அதனைத் தொடர்ந்து, கடந்த 2 நாட்களுக்கு முன்பு இஸ்ரேல் ஆதரவு அளித்தால் போரை நிறுத்த தயார் என ஹமாஸ் அமைப்பினர் உறுதி தெரிவித்தனர்.
தற்போது, ஓராண்டாக நடைபெற்று வரும் இந்த போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்கா வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கூறி உள்ளார்.
ஆண்டனி பிளிங்கன் பேட்டி ..!
இந்த போருக்கு முற்றுப் புள்ளி வைக்க இஸ்ரேல் சென்றுள்ள அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரான ஆண்டனி பிளிங்கன், இஸ்ரேல் பிரதமரான நெதன்யாகுவை சந்தித்துப் போர் நிறுத்தம் தொடர்பாகப் பேச்சு வார்த்தை நடத்தினார். அதன் பின் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், “இஸ்ரேல் பிரதமரான நேதன்யாகுவை நேரில் சந்தித்துப் பேசினேன். அப்போது அவருடன் இணைந்து ஹமாஸ் அமைப்புடனானப் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த ஆலோசனையின் முடிவில் காஸா மீதான போரை நிறுத்துவதற்கு இஸ்ரேல் சம்மதம் தெரிவித்துள்ளது. ஹமாஸ் அமைப்பினரால் பிடித்துச் செல்லப்பட்ட இஸ்ரேல் பணய கைதிகளை விடுவிக்கும் பட்சத்தில் இந்த போரானது நிறுத்தப்படும் என இஸ்ரேல் பிரதமர் உறுதி அளித்துள்ளார். எனவே காஸா போரை நிறுத்த போராடிய அனைத்து நாடுகளும் இதற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும்.” என்று அவர் கூறினார்.
இதனால், ஓராண்டுகளாக நடைபெற்று வந்த இந்த போர் முடிவுக்கு வர உள்ளதாக உலக நாடுகள் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், ஹமாஸ் அமைப்பின் இந்த போர் குறித்த இறுதி முடிவுக்காக உலகநாடுகள் காத்துக் கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.