பள்ளி மாணவிக்கு பாலியல் வன்கொடுமை.! முன்னாள் நாதக பிரமுகரை தொடர்ந்து மேலும் 3 பேர் கைது.!
கிருஷ்ணகிரி : பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிக்கு உதவிய 2 நண்பர்கள், மேலும் ஒரு ஆசிரியை கைது செய்யப்பட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார்ப் பள்ளி ஒன்றில் அண்மையில் நடைபெற்ற போலியான என்சிசி முகாமில் சுமார் 17 பள்ளி மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த முகாமில் கலந்து கொண்ட 13 வயது பள்ளி மாணவிக்கு போலி என்சிசி பயிற்சியாளரால் பாலியல் வன்கொடுமை நடந்துள்ளது. இந்த பாலியல் வன்கொடுமை புகாரின் பெயரில் போக்ஸோ பிரிவில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிரமான விசாரணையில் ஈடுபட்டனர்.
நாதக நிர்வாகி கைது
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகி சிவராமனை கிருஷ்ணகிரி காவல்துறையினர் கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி கைது செய்தனர். கைது செய்ய முற்படும் போது, தப்பிக்க முயன்ற சிவராமன் அருகில் உள்ள ஒரு பகுதியில் கீழே விழுந்ததில் அவருக்குக் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனால் சிவராமனுக்கு அரசு மருத்துவமனையில் எலும்பு முறிவு சிகிச்சை அளிக்கப்பட்டு காலில் “மாவுக்கட்டு” போடப்பட்டுள்ளது.
மேலும் மூன்று பேர் கைது
இந்த கைது நடவடிக்கையை அடுத்து இதே வழக்கில் தொடர்புடைய சுதாகர் என்பவரையும் காவல்துறையினர் கைது செய்தனர். சிவராமன், சுதாகர், உட்பட மொத்தம் 9-பேரை காவல்துறையினர் இந்த வழக்கில் கைது செய்திருந்தனர். இந்த வழக்கு தொடர்பான விசாரணை தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், மேலும் 3 பேரை கைது செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கு தொடர்பாக தனியார் பள்ளியின் ஆசிரியை கோமதி (வயது 52) மற்றும் சிவராமனுக்கு உடைந்தையாக இருந்ததாக கூறப்படும் திம்மாபுரத்தை சேர்ந்த முரளி (30) மற்றும் தர்மபுரி மாவட்டம் எட்டிமரத்துப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் (27) ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.கைது செய்யப்பட்ட பிறகு அவர்கள் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும், மொத்தமாக இவர்கள் மூன்று பேரையும் சேர்த்து இதுவரை இந்த வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.