புதிய தலைமைச் செயலாளர் நியமனம் முதல்… பிரதமர் மோடியின் வாழ்த்து செய்தி வரையில்….

PM Modi - Kalaignar 100 rs Coin - Tamiladu Chief secretary Muruganandham IAS

சென்னை : தமிழக புதிய தலைமைச் செயலாளராக முருகானந்தம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளது முதல், பிரதமர் மோடி ரக்ஷா பந்தனுக்கு வாழ்த்து தெரிவித்தது வரையில் பல்வேறு முக்கிய நிகழ்வுகள் குறித்து இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.

கலைஞர் 100 நாணயம் :

மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி பெயரில் 100 ரூபாய் நாணயத்தை நேற்று சென்னையில் நடைபெற்ற விழாவில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டார்.

புதிய தலைமைச் செயலாளர் :

தமிழ்நாடு தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா பதவிக்காலம் விரைவில் நிறைவு பெற உள்ளதை முன்னிட்டு இன்று புதிய தலைமை செயலாளரை அரசு நியமித்துள்ளது. அதன்படி, முதலமைச்சரின் தனி செயலாளராக இருந்த முருகானந்தம் ஐஏஎஸ் தமிழ்நாட்டின் 50வது தலைமைச்  செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிவதாஸ் மீனா ஐஏஎஸ், தற்போது ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணைய செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

முதலமைச்சர் நன்றி :

கலைஞர் 100 ரூபாய் நாணயத்தை வெளியிடும் நிகழ்வுக்கு வந்து, கலைஞர் பற்றிய பாராட்டுகளை எடுத்துரைத்து வாழ்த்திய மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் அவர்களுக்கு நன்றி என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

நாதக முன்னாள் நிர்வாகி கைது :

கிருஷ்ணகிரி அருகே, தனியார் பள்ளியில் 8ஆம் வகுப்பு படிக்கும் 12 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த என்சிசி நிர்வாகியும், நாம் தமிழர் கட்சி முன்னாள் நிர்வாகியுமான சிவராமனை நேற்று நள்ளிரவு காவல்துறையினர்கைது செய்துள்ளனர்.

பிரதமர் மோடி வாழ்த்து :

இன்று இந்தியா முழுக்க ரக்ஷா பந்தன் (சகோதர, சகோதரிகள் தினம்) கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில், ரக்ஷா பந்தன் பண்டிகை உங்கள் அனைவரது உறவுகளிலும் இனிமையையும், வாழ்வில் மகிழ்ச்சியையும், செழிப்பையும் கொண்டு வரட்டும் என பதிவிட்டுள்ளார்.

பங்குச்சந்தை உயர்வு :

வார தொடக்க முதல்நாளில் இன்று காலையிலேயே பங்குச்சந்தை சற்று உயர்வுடன் தொடங்கி உள்ளது. தேசிய பங்குச்சந்தை நிஃப்டி 95 புள்ளிகள் உயர்ந்து 24,636 புள்ளிகளை கொண்டுள்ளது. அதே நேரம் மும்பை பங்குச்சந்தை பிஎஸ்சி 243 புள்ளிகள் உயர்ந்து 80.680 புள்ளிகளை கொண்டுள்ளது.

ஆளுநர் ரவி டெல்லி பயணம் :

கடந்த ஆகஸ்ட் 1ஆம் தேதியன்று டெல்லி பயணம் மேற்கொண்டு இருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, இன்று மீண்டும் டெல்லிக்கு பயணம் மேற்கொள்கிறார். பிரதமர் மோடியை சந்திக்க செல்வதாக கூறப்படுகிறது. கடந்த ஜூலை 31ஆம் தேதியே தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பதவிக்காலம் முடிந்தும், புதிய ஆளுநர் நியமிக்கப்படாததால் ஆர்.என்.ரவி, தமிழக ஆளுனராக செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடதக்கது.

தரவரிசை பட்டியல் :

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவ படிப்புகளுக்கான மருத்துவ சேர்க்கை தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்படவுள்ளது. தமிழக மருத்துவ தேர்வுக்குழுவால் வெளியிடப்படும் “மெரிட் லிஸ்டை” தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிடுவார்.

மருத்துவர்கள் போராட்டம் :

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் படுகொலையை கண்டித்தும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கேட்டும் இன்று புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதே போல, மும்பை ஆசாத் மைதானத்தில் அங்குள்ள மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

தூத்துக்குடி ஆட்சியர் மாற்றம் :

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியராக பொறுப்பில் இருந்த லட்சுமிபதி ஐஏஎஸ், முதலமைச்சரின் இணை செயலராக நியமிக்கப்பட்டார். இதனை அடுத்து தூத்துக்குடி மாவட்ட புதிய ஆட்சியராக இளம் பகவத் நியமிக்கப்பட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்