திமுக, அதிமுக ஆலோசனைக் கூட்டம் முதல்., விண்ணில் பாய்ந்த ராக்கெட் வரை…

Tamilnadu CM Stalin - SSLV D3 Rocket - Edappadi palanisamy

சென்னை : இன்று திமுக, அதிமுக கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஹரியானா ஆகிய மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் தேதிகள் இன்று தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட உள்ளன. இன்னும் பிற முக்கிய நிகழ்வுகளை இந்த செய்திக் குறிப்பில் காணலாம்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் :

இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், அனைத்து மாவட்டச் செயலாளர்களும் கலந்து கொள்ளும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள திமுகவின் முப்பெரும் விழா, உள்ளாட்சித் தேர்தல், மக்களவை தேர்தல் வாக்கு சதவீதம் உள்ளிட்டவை குறித்து ஆலோசிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

அதிமுக செயற்குழு கூட்டம் :

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர் மாளிகையில் இன்று அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. அதிமுக அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன் இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குத் தலைமை தாங்குகிறார். இக்கூட்டத்திற்கு அதிமுக மாவட்டச் செயலாளர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் எனப் பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செயற்குழு கூட்டத்தில் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

பாஜக மவுன பேரணி :

கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் கொலை சம்பவம் உள்ளிட்ட பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இன்று தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பாஜக சார்பில் மௌனப் பேரணி நடத்தப்படும் என முன்னதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.

மாநில சட்டமன்ற தேர்தல்கள் :

மகாராஷ்டிரா, ஹரியானா, ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்குத் தேர்தல் நடைபெறும் தேதி உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று வெளியிட உள்ளது. மேலும், ஜம்மு காஷ்மீர் மாநில சட்டமன்ற தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கலைஞர் நூற்றாண்டு நினைவு நாணயம் :

வரும் ஞாயிற்றுக்கிழமை கலைஞர் பெயரில் 100 ரூபாய் நாணயம் வெளியிடப்பட உள்ள நிலையில், இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதில், கலைஞர் பெயரில் 100 ரூபாய் நாணயம் வெளியிட அனுமதி அளித்த இந்திய ஒன்றிய அரசுக்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார்.

நாகை முதல் இலங்கை :

நாகை துறைமுகம் முதல் இலங்கை காங்கேசன் துறைமுகம் வரையில் செல்லும் வகையில் கப்பல் போக்குவரத்து இன்று முதல் தொடங்கி உள்ளது. இதில் பயணிக்கச் சாதாரண கட்டணமாக ரூபாய் 5 ஆயிரமும்,  பிரீமியம் கட்டணமாக ரூபாய் 7500-ம் டிக்கெட் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இன்று காலை 9 மணிக்குத் தனது முதல் பயணத்தைத் தொடங்கி உள்ளது.

எஸ்.எஸ்.எல்.வி -டி3 ராக்கெட் :

பூமியைக் கண்காணிக்க இஸ்ரோவில் இ.ஓ.எஸ் 08 என்ற செயற்கைக்கோள் தயாரிக்கப்பட்டது. இந்த செயற்கைக்கோள் இன்று, ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் ஏவுதளத்திலிருந்து காலை 9.17 மணிக்கு எஸ்.எஸ்.எல்.வி டி3 ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்பட்டது.

மருத்துவர்கள் போராட்டம் :

கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் ஆகஸ்ட் 17ஆம் தேதியன்று நாடு முழுவதும் மருத்துவர்கள் 24 மணிநேரம் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்