ஆந்திராவில் ஒரு அம்மா உணவகம்.. முதல்வர் சந்திரபாபு நாயுடு மறு தொடக்கம்.!

Anna canteen opened CM Chandrababu Naidu

விஜயவாடா : ஆந்திரா மாநிலம் குடிவாடாவில் சுதந்திர தினத்தையொட்டி, அண்ணா கேன்டீனை முதல்வர் சந்திரபாபு நாயுடு இன்று தொடங்கி வைத்தார்.

தமிழகத்தில் செயல்பட்டு வரும் அம்மா உணவகம் போலவே, ஆந்திரா மாநிலத்தில் முன்னாள் முதல்வர் என்.டி.ஆரின் பெயரில் “அண்ணா கேண்டீன்” எனும் மலிவு விலை உணவகத் திட்டத்தை அம்மாநிலத்தின் தற்போதைய முதல்வர் சந்திரபாபு நாயுடு மறு தொடக்கம் செய்துள்ளார்.

இத்திட்டத்தின் கீழ், இந்த வாரம் முதல் கட்டமாக 100 அண்ணா உணவகங்கள் தொடங்கப்பட உள்ளது. கேன்டீனை திறந்து வைத்துவிட்டு, சந்திரபாபு மற்றும் அவரது மனைவி புவனேஸ்வரி அண்ணா கேன்டீனில் காலை உணவை அருந்தினர்.

இந்த திறப்பு விழா முதலில், வடக்கு ஆந்திராவில் நடத்துவதற்கு முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு திட்டமீட்டு இருந்தார். ஆனால், எம்எல்சி தேர்தல் விதிமுறை அமலுக்கு வந்ததால்,இத்திட்ட தொடக்க விழா நிகழ்வு கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள குடிவாடா என மாற்றப்பட்டது.

மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட ஆட்சியர்களுக்கு இந்த கேன்டீன்களில் தர சோதனை நடத்தவும், சுகாதாரம் பராமரிக்கப்படுவதை உறுதி செய்யவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த கேன்டீனில் காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஆகியவை வழங்கப்படும்.

காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவு ஒவ்வொன்றும் 5 ரூபாய்க்கு கிடைக்கும். 15 ரூபாய்க்கு, இந்த கேன்டீன்களில் ஒரு நபர் ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவு சாப்பிடலாம். ஒய்ஆர் காங்கிரஸ் கட்சி கடந்த முறை ஆட்சிக்கு வந்ததும், தெலுங்கு தேசம் அரசு தொடங்கிய அண்ணா கேன்டீன்களை அப்போதைய முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மூடிவிட்டார்.

இதனை தொடர்ந்து அண்மையில் நடந்து முடிந்த ஆந்திர மாநில சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி பெரும் வெற்றி பெற்று சந்திரபாபு நாயுடு கடந்த ஜூன் 12ஆம் தேதி முதலமைச்சராக பதவியேற்றார். அவர் பதவியேற்ற முதல் நாளில் கையெழுத்திட்ட ஐந்து திட்டங்களில் அண்ணா கேண்டீன் திட்டமும் ஒன்று. தெலுங்கு தேசம் கட்சி ஆட்சியில் மாநிலம் முழுவதும் அப்போது 203 கேன்டீன்கள் அமைக்கப்பட்டது.

தற்போது, ஆளும் தெலுங்கு தேசம், ஜனசேனா மற்றும் பாஜகவைச் சேர்ந்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் எம்பிக்கள் தங்கள் தொகுதிகளில் புதியதாக அமைக்கப்பட உள்ள அண்ணா கேன்டீன்களை திறந்து வைப்பார்கள். வடக்கு ஆந்திரப் பிரதேசத்தில் எம்எல்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அங்கு மட்டும் அண்ணா கேன்டீன் திறப்பு விழா அடுத்த மாதம் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்