திராவிட சித்தாந்த கருத்து : ஆளுநர் ரவி சிறைக்கு செல்வார்.. ஆர்.எஸ்.பாரதி கடும் தாக்கு.!

DMK RS Bharathi - Governor RN Ravi

சென்னை : நாட்டில் பிரிவினைவாதத்தை ஆதரித்த சித்தாந்தங்களில் திராவிட சித்தாந்தமும் ஒன்று என ஆளுநர் ரவி கூறியதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.

இன்று (ஆகஸ்ட் 15) நாடு முழுவதும் 78வது சுதந்திர தின விழா கொண்டாடப்படுவதை முன்னிட்டு, நேற்று சென்னை ஐஐடியில் ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னை ஐஐடி மற்றும் ஆளுநர் மாளிகை இணைந்து நடத்திய இந்த நிகழ்வில் நாடு சுதந்திரம் அடைந்த சமயத்தில் நிகழ்ந்த தேசப் பிரிவினை மற்றும் அப்போது நேர்ந்த கொடூரங்கள் பற்றி நினைவுகூரப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறுகையில், “வரலாற்று அடிப்படையில் கடந்த காலத்தை அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும். நமது நாட்டில் பிரிவினையால் பல்வேறு கொடூரங்கள் வன்முறைகள் நடந்தன. பிரிவினைவாதத்தால் பாகிஸ்தான் ஜம்மு காஷ்மீரின் பெரும் பகுதிகளை ஆக்கிரமித்ததை மறந்து விட்டோம்.

நமது நாட்டின் எல்லைப் பகுதியிலிருந்து 30 ஆயிரம் கிமீ பரப்பளவை சீனா ஆக்கிரமித்துள்ளது. கச்சத்தீவு உரிமையை விட்டுக் கொடுத்து விட்டோம். 65 ஆண்டுகளாக பாரதத்தை ஆண்டவர்கள் நமது சித்தாந்தத்தை உடைக்க பார்த்தனர். நாம் அனைவரும் ஒன்று என்பதே பாரதத்தின் சித்தாந்தம்.

அமெரிக்காவிலிருந்து கொண்டு இந்தியப் பொருளாதாரத்தைச் சீர்குலைக்கும் முயற்சியை சிலர் செய்து வருகின்றனர். 1947இல் ஏற்பட்ட பிரிவினை இன்னும் முடியவில்லை. தற்போதும் இருப்பிடம், மொழி ஆகியவற்றின் மூலம் மக்கள் மனதில் பிரிவினைவாதத்தைச் சிலர் ஏற்படுத்துகிறார்கள். பல சித்தாந்தங்கள் பிரிவினையை ஆதரித்தன. அதில் திராவிட சித்தாந்தமும் ஒன்று என்று ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்றைய நிகழ்வில் உரையாற்றினார்.

திராவிட சித்தாந்தம் பிரிவினைவாதத்தை ஆதரித்தது என்ற கருத்துக்கு திமுக சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கடும் கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நாடு முழுவதும் தேசிய கீதம் பாடப்படுகிறது. தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் வருகிறது. திராவிடம் பிடிக்கவில்லை என்றால் அதனை நீக்கிவிட்டு தேசிய கீதத்தை ஆளுநர் பாடுவாரா? அப்படி அவர் பாடினால் தேசிய கீதத்தை அவமதித்த வழக்கில் ஆளுநர் ஆர்.என்.ரவி சிறைக்கு செல்வார்.” என்று ஆளுநர் கூறிய திராவிட சித்தாந்த கருத்து குறித்து ஆர்.எஸ்.பாரதி விமர்சனம் செய்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்