வயநாடு பாதிப்பு.., மாஸ்டர் பிளான் போட்ட தமிழக அரசு.!

TN CM MK Stalin say about Wayanad Landslide

சென்னை : தமிழக மலைப்பகுதிகளில் இடர்பாடுகள் ஏற்படும் வாய்ப்புகள் குறித்து மாநில பேரிடர் மேலாண்மை குழு ஆய்வு செய்ய உள்ளது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கேரளா மாநிலம் வயநாட்டில் கடந்த ஜூலை 30ஆம் தேதியன்று மேப்பாடி, சூரல் மலை, முண்டக்கை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை சுமார் 400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 100க்கும் மேற்பட்டோரைத் தேடும் பணிகள் இன்னும் நடைபெற்று வருகிறது. நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரள மாநிலத்திற்கு மத்திய அரசு, அண்டை மாநில அரசுகள் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளன.

ஒரே நாளில் பெய்த அதிகப்படியான கனமழை, அதனால் ஏற்பட்ட நிலச்சரிவு என கேரள மாநிலம் வயநாடு தற்போது இயல்பு நிலைக்குத் திரும்பக் கடுமையாகப் போராடி வருகிறது. இம்மாதிரியான துயர நிகழ்வு தமிழகத்தில் உள்ள மலைப்பகுதிகளில் நடைபெற்று விட கூடாது என முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு ஓர் திட்டத்தை வகுத்துள்ளது. இத்திட்டம் குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுதந்திர தின விழாவில் குறிப்பிட்டுப் பேசினார்.

இன்று சென்னை கோட்டை கொத்தளத்தில் நடைபெற்ற 78வது சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், ” சமீக காலமாக நாம் சந்திக்கும் மிக பெரிய பிரச்சனை காலநிலை மாற்றம் ஆகும். இதன் காரணமாக அண்டை மாநிலமாக கேரளா,  வயநாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவு அங்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாதிப்பிலிருந்து கேரளா மாநிலம் மீண்டு வருவதற்கு நாம் பல்வேறு உதவிகளைச் செய்துள்ளோம் .

தமிழகத்தில் நீலகிரி,  வால்பாறை, கொடைக்கானல் சுற்றியுள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகள், ஏற்காடு மலைப்பகுதிகள் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பெருமழை காலங்களில் ஏற்படும் இடையூறுகளை முறையாக ஆய்வு செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

வனத்துறை, புவிசார் அறிவியல் துறை, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை, சுற்றுச்சூழல் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த வல்லுநர் குழுவால் அறிவியல் அடிப்படையில் ஓர் விரிவான ஆய்வு நடத்தப்பட உள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை அமைப்பு மூலம் இந்த பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

மேலும், எதிர்காலத்தில் ஏற்படும் பாதிப்புகள் முன்னதாக அறிவதற்கும் அதனைத் தவிர்ப்பதற்கும் நீண்டகால அடிப்படையில் ஆபத்துகளைக் குறைப்பதற்கும் அரசு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இந்த குழு ஆய்வு செய்து பரிந்துரைகளை வழங்கும். அந்த பரிந்துரைகளின் மீது அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்.” என மலைப்பகுதிகளில் ஏற்படும் இடர்பாடுகள் குறித்தும், அதற்கான முன்னெச்சரிக்கைகள் குறித்தும் தமிழக அரசு மேற்கொள்ள உள்ள நடவடிக்கைகள் பற்றி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சுதந்திர தின விழாவில்  பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்